
கொல்கத்தா: “நான் உயிரோடு இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும், நாடு முழுவதும் மேற்கு வங்க மக்கள் மீது பாஜக 'மொழியியல் பயங்கரவாதத்தை' கட்டவிழ்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய கொல்கத்தாவின் மாயோ சாலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணமூல் சத்ரா பரிஷத்தின் நிறுவன தின நிகழ்வில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நோக்கத்துடன் மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்புகளை மேற்கொள்ள, மாநிலத்துக்கு வெளியே இருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை பாஜக அனுப்பியுள்ளது. யாராவது உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்புக்காக வந்தால், உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்க அவர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.