
மகாராஷ்டிராவில் தற்போது தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 9 மணி நேரமாக இருக்கிறது. ஆனால் அதனை 10 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான சட்டவரைவு திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான திட்டத்தை மாநில தொழில் துறை அமைச்சகம் தாக்கல் செய்தது.
மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா கடை மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் 5 வகையான திருத்தங்களை செய்யவும், தொழில் துறை அமைச்சகம் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கேட்டது.
இதனை ஆய்வு செய்த மாநில அரசு, இது குறித்து மேலும் ஆய்வு செய்யவேண்டியிருப்பதாகவும், சில கூடுதல் தகவல்கள் தேவை என்றும் கூறி, முடிவு எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது.
பெண்களை இரவு நேரத்தில் பணி செய்ய அனுமதிப்பது தொடர்பாகவும், இச்சட்ட திருத்தத்தில் முடிவு செய்யப்படவில்லை.
மகாராஷ்டிரா கடை மற்றும் நிறுவனங்கள் சட்டம், மாநிலத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது.
பணி நேரத்தை அதிகரிப்பது குறித்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகாஷ் கூறுகையில்:
“அதிகமான தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் 9 மணி நேரத்திற்கும் அதிகமான வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை. எனவே, பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் பெண்கள் இரவு நேரத்தில் கடைகள், ஹோட்டல்களில் வேலை செய்ய முடியும். இது தொடர்பான திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை,” என்றார்.
தற்போது தனியார் நிறுவனங்களில் 3 மாதத்தில் 125 மணி நேரம் ஓவர்டைம் வேலை செய்யலாம் என்று இருப்பதை, 144 மணி நேரமாக அதிகரிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்தால் அரை மணி நேரம் இடைவெளி விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஓவர்டைம் சேர்த்து ஒரு நாளைக்கு 10.30 மணி நேரம் வேலை செய்யலாம் என்று இருப்பதை 12 மணி நேரமாக அதிகரிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு 12 மணி நேரம் கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 மற்றும் அதற்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் மட்டும் இச்சட்டம் அமல்படுத்தப்படும். முன்பு இது 10 மற்றும் அதற்கு அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் அமல்படுத்தப்பட்டு வந்தது.
தொழில்துறையினர் நீண்ட காலமாக பணி நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அதனை மாநில அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஆனாலும் சில அமைச்சர்கள் இதற்கு கூடுதல் விளக்கம் கேட்டதால் உடனே ஒப்புதல் வழங்கவில்லை.
மாநில அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச பணி நேரம் தொடர்ந்து 12 மணி நேரமாக நீடிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் L&T நிறுவனத்தின் தலைவர் என்.சுப்ரமணியன், `வாரத்தில் 90 மணி நேரம் பணி நேரம் இருக்கவேண்டும், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பணியாற்ற வேண்டும்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Infosys நிறுவனர் நாராயண மூர்த்தி, `வாரத்தில் 70 மணி நேரம் பணி நேரமாக இருக்கவேண்டும்’ என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், `பணி நேரத்தை அதிகரிக்கும் திட்டம்’ தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.