• August 28, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan:  எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுகிறான். அவசரப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டாம் என்று சிலரும், ஆபரேஷன்தான் சரியான தீர்வு என சிலரும் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி.  

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நம் உடலில் ‘டான்சில்’ என்றோர் உறுப்பு உண்டு. வாய்க்கும் உணவுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள பாதுகாப்பு உறுப்பு அது, சுற்றுப்புற மாசிலுள்ள கிருமிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அந்த உறுப்புதான். 

தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் டான்சில் வழியேதான்  கிருமிகள் உடலுக்குள் செல்லும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்காதபடி டான்சில் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதனால் அந்தப் பகுதி வீக்கமடையும். அதனால்  தீங்கு விளைவிக்கும் அந்தக் கிருமி, குழந்தையின் நுரையீரல், வயிறு உள்ளிட்ட வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாமல் தடுக்கப்படும். குழந்தைகளின் 11 வயது வரை இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே நோய்க்கு எதிராக டான்சில் முன் அளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

டான்சில் வீக்கம் ஒருவகையில் நல்லது என்றே சொல்லலாம்.  சில குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் தீவிரமாக இருக்கும். வீக்கம் அதிகரித்த காரணத்தால் சரியாகச் சாப்பிட முடியாது.தண்ணீர் கூட குடிக்க முடியாது. மூச்சு விட சிரமமாக இருக்கும்.  அதை ‘ஃபரின்ஜியல் டான்சில்ஸ்’ (pharyngeal tonsils)  என்று சொல்வோம். இந்தப் பிரச்னை வந்தால் சிலருக்கு காய்ச்சல் அதிகரிக்கும், சரியாகச் சாப்பிட முடியாது, தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். டான்சில் பழுத்து வீங்கும். அதற்கு ஆன்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

டான்சில்ஸ் பாதிப்பு… ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

குழந்தைகள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, இருப்பிடம் என அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டையில் வீக்கம் வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் ஃபிரெஷ்ஷான, சூடான உணவுகளைக் கொடுப்பது, கொதிக்கவைத்து ஆறவைத்த நீர், சுத்தமான காற்றை சுவாசிக்கும்படியான சூழல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு டான்சில் வீக்கம் வராமல் பாதுகாக்கலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே தேவையின்றி டான்சில் வீக்கத்தைச் சரிசெய்ய முடியும்.

ஆனால், ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் குழந்தைக்கு இப்படி வருகிறது, மிகவும் அவதிப்படுகிறது என்ற நிலையில் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதற்கு ‘டான்சிலெக்டமி’ (Tonsillectomy) என்று பெயர். 

உங்கள் குழந்தைக்கு இப்படி வருகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு மருத்துவர் சொல்வதற்கேற்ப முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *