• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் ஆகஸ்ட் 1 முல் 13 வரை தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் 13-ம் நாள் இரவு போலீஸ்காரர்கள் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், தூய்மைப்பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அடுத்த நாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, போராட்டக்காரர்களின் கோரிக்கை இடம்பெறாத 6 புதிய திட்டங்களை அறிவித்தது.

அதற்கடுத்த நாள், போராட்டத்தில் ஈடுபடாத தூய்மைப் பணியாளர்கள் குழு ஒன்றை அமைச்சர் சேகர் பாபுவும், மேயர் பிரியாவும் திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வரிடம் அழைத்துச் சென்றனர்.

இப்போது, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை சம்பந்தமான மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் கைது

இவ்வாறிருக்க, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வரலட்சுமிக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாத அவர்களின் தாயின் இழப்புக்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கியது.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது நேரடியாகக் களத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்த நடிகை அம்பிகா, உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்பிகாவிடம் பத்திரிகையாளர் ஒருவர், “தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு நீங்கள் வந்தபோதே அம்பிகாவின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது என பேசப்பட்டதே?” என்று அது குறித்து கேட்டார்.

அதற்கு அம்பிகா, “அப்படி நடக்கணும் என்று இருந்தால் நடக்கட்டும். எனக்கு அதில் எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

வந்தால் என்ன? வரலாமே அதில் தவறு ஒன்றும் இல்லையே. நம் மக்களை டிக்கெட் கவுன்ட்டர் எண்களாக மட்டுமே பார்க்காதீர்கள்.

நடிகை அம்பிகா
நடிகை அம்பிகா

எல்லோர் மேலும் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. ஏன் அப்படி செய்யவில்லை என்று நான் வருத்தப்படலாம், ஆனால் அவர்களின் மனதில் ஏறி பண்ணுங்க என்று சொல்ல முடியாது அல்லவா.

அரசியலுக்கு சீக்கிரமாக வந்துடறேன். இப்போது நான் இங்கு அரசியல் ரீதியாக வரவில்லை.

நாம் எதாவது செய்வதற்கு அரசியல் இருந்தால்தான் அது நடக்கும் என்றால் அப்படியே இருந்துட்டு போறேன்.

ஆனால், யாரையும் குறை சொல்லும் அரசியல்வாதியாக நான் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *