• August 27, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தொடரின் பாதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

அந்த ஓய்வு அறிவிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்புதான், ஐ.பி.எல் மெகா ஏலத்தில் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வாங்கியது.

அஸ்வின்

இருப்பினும், 2008 முதல் 2015 வரை சென்னை அணியில் முக்கிய வீரராக ஆடிய அஸ்வினால், அத்தகைய தாக்கத்தை கடந்த சீசனில் ஏற்படுத்த முடியவில்லை.

9 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டும்தான் வீழ்த்தியிருந்தார்.

சென்னையும் அணியும் மோசமாக ஆடி பிளேஆஃப் கூட செல்ல முடியவில்லை என்றாலும், ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் போன்ற இளம் வீரர்களின் ஆட்டத்திறன் சீசன் இறுதியில் வெளிப்பட்டது.

அதனால், அடுத்த சீசனில் அணியை மறுசீரமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

மேலும், சுழற்பந்துவீச்சில் நூர் அஹமது சிறப்பாகச் செயல்பட்டதால் அடுத்த சீசனில் அணியில் அஸ்வின் இருப்பாரா என்ற பேச்சுக்கள் எழுந்தது.

சமீபத்தில், டெவால்ட் பிரேவிஸை அதிக தொகை கொடுத்து சி.எஸ்.கே வாங்கியது என்ற பொருள்படும் வகையில் அஸ்வின் பேசியது, அப்படி விதிமுறைகள் மீறப்படவில்லை என அணி நிர்வாகத்தை அறிக்கை வெளியிட வைத்தது.

இவ்வாறான சூழலில், ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் இன்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அஸ்வின், “சிறப்பான நாளில் சிறப்பான தொடக்கம்.

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்பார்கள். இன்று ஒரு ஐ.பி.எல் வீரராக எனது நேரம் முடிவடைகிறது.

ஆனால், பல்வேறு லீக் (வெளிநாட்டு லீக் தொடர்கள்) போட்டிகளுக்கான எனது நேரம் இன்றே தொடங்குகிறது.

பல ஆண்டுகால உறவுகளுக்காகவும், அற்புதமான நினைவுகளுக்காகவும் அனைத்து அணிகளுக்கும் நன்றி.

முக்கியமாக ஐ.பி.எல் மற்றும் பி.சி.சி.ஐ இதுவரை எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஐ.பி.எல்லில் நீங்கள் ரசித்த அஸ்வினின் சிறப்பான ஆட்டம் எதுவென்று கமெண்ட்டில் பதிவிடுங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *