
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்ற கூட்டத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா, தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, ரிப்பன் மாளிகை முன்பு, 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக நள்ளிரவில் கைது செய்ததைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் 4 பேர், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்’ என கோஷம் எழுப்பியவாறு மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.