• August 27, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan:  ஹீமோகுளோபின் குறைபாடு இதயச் செயலிழப்பை ஏற்படுத்துமா? குறிப்பாக பெண்களுக்கு, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதய பாதிப்பின் அறிகுறிகளை எப்படி உணர்வார்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஹீமோகுளோபின் என்பது ரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் ஒரு புரதம். இன்னும் எளிமையாகப் புரியவைக்க வேண்டுமானால், செடிகளுக்குப் பச்சையம் எனப்படும் குளோரோபில் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரியானது மனிதர்களுக்கு ஹீமோகுளோபின். இரண்டுமே ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் வேலையைச் செய்பவைதான்.

உடலியக்கத்துக்கு மிக முக்கியமான வேலையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையானது,  ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக தடைப்படும்.

ஹீமோகுளோபின் எனப்படும் ரத்தச் சிவப்பணுக்கள் குறையும்போது, இதயத்துக்குப் போதுமான பிராணவாயு கிடைக்காமல் போகும். அதனால் இதயநலன் பாதிக்கப்படும் என்பதும் உண்மைதான்.

சராசரியாக இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவில் ஒன்றிரண்டு கிராம் குறையும்போது இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. சராசரியைவிட மிகவும் குறையும்போதுதான் பிரச்னையே.

ஹீமோகுளோபின்

பொதுவாக, பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

அது 8 என்ற அளவைவிட குறையும்போது அவர்களுக்கு படபடப்பு, மூச்சுத்திணறல், தளர்ச்சி, களைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

மாதவிடாய் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக  ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் சராசரியைவிட குறையாமல் பார்த்துக்கொள்ள உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, 8 கிராமுக்கு கீழ் குறையும்போது உடனடியாக அலெர்ட் ஆக வேண்டும். உணவின் மூலம் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க முடியாதவர்கள், மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டாலே அனீமியா பாதிப்பிலிருந்து மீளலாம். அதன் மூலம் இதயநலனையும் காக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *