
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு தனி இடம் உண்டு.
ஏனெனில், 1983-ல் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற பிறகு 6 உலகக் கோப்பைத் தொடர்களில் ஒருமுறைக்கூட கோப்பை வெல்லவில்லை.
அதில், 2003-ல் இறுதிப் போட்டிவரை முன்னேறியும் அப்போட்டியில் சச்சின் அவுட்டானதுமே கோப்பை கனவும் போய்விட்டது. 2007-ல் படுமோசமாக குரூப் சுற்றோடு இந்தியா வெளியேறியது.
இப்படியான 28 ஆண்டுகால ஏக்கத்துக்கு முற்றுபுள்ளி வைத்ததுதான் 2011 உலகக் கோப்பை.
தோனி தலைமையிலான சீனியர் & ஜூனியர் கலந்த அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பால் இந்தியா சாம்பியனானது.
அந்தத் தொடர் முழுக்க ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு பெரிதாக பங்களிக்காத கேப்டன் தோனி, இறுதிப் போட்டியில் மூன்றாவது விக்கெட்டாக கோலி அவுட்டானதும், ஆல்ரவுண்டராக தொடரில் ஜொலித்துக் கொண்டிருந்த யுவராஜ் இறங்க வேண்டிய இடத்தில் தோனி இறங்கினார்.
யுவராஜ் இறங்காமல் ஏன் தோனி இறங்குகிறார் என பல கோடி இந்தியர்களும் கோபப்பட்டனர், குழம்பினர்.
ஆனால், தோனியின் வின்னிங் ஷாட்டுடன் கோப்பை கைக்கு வந்ததும் அந்த கேள்விகள் எல்லாம் மறைந்துவிட்டது.
அன்று முடிவு மட்டும் வேறுமாதிரியாக இருந்தால் தோனி இன்று இந்திய ரசிகர்கள் மனதில் எப்படி இருந்திருப்பார் என்று யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில், அந்த இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்பு தோனி இறங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று சச்சின் தற்போது கூறியிருக்கிறார்.

ரெட்டிட் தளத்தில் `என்னிடம் எதையும் கேளுங்கள் (Ask Me Anything)’ செக்ஷனில் சச்சினிடம் பயனர் ஒருவர், “2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன்பு தோனியை இறக்கியது சச்சினின் யோசனை என்று சேவாக் கூறியிருந்தார்.
அது உண்மையா? அப்படியெனில் அதற்கான காரணம் என்ன?” என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு சச்சின், “அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இடது வலது காம்பினேஷன் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தொல்லை.
இன்னொன்று, முத்தையா முரளிதரன் சி.எஸ்.கே-வில் விளையாடியவர், மூன்று சீசன்கள் வலைப்பயிற்சியில் அவரை தோனி எதிர்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

முத்தையா முரளிதரன் கூட தோனியின் அந்த நகர்வு குறித்து ஒரு நேர்காணலில், சிஎஸ்கே-வில் வலைப்பயிற்சியில் தன்னை தோனி எதிர்கொண்டிருப்பதாகவும், அதனால் தன்னுடைய பந்துவீச்சை சமாளிப்பதற்காகவும், மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் தடுப்பதற்காகவும் தோனி களமிறங்கினார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.