• August 26, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஆனந்த விகடன் என்பது வெறும் பத்திரிகை மட்டுமல்ல.எங்கள் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் அல்லது உறுப்பினர். என் பெயர் மகேஷ்.

எனக்கு இப்போது 57 வயதாகிறது. சுமார் 43  வருடங்கள் பின்னே சென்றாலும் ஆனந்த விகடனின் நினைவுகள் மிகவும் புதிதாய் இன்றும் மிளிர்கின்றன. 

அப்பா அம்மா நான் மற்றும் எனக்கு மூன்று தங்கைகள் என் அழகான குடும்பம். சென்னை தாம்பரத்தில் வசித்து வந்தோம். தாத்தா பாட்டியும் கூடவே இருந்தனர்.

அப்போது விகடன் வெள்ளிக்கிழமை வெளியாகும். பணி முடித்து வருகையில் அப்பா விகடன் வாங்கி வருவார். அப்போது நானும் என் இரு தங்கைகள் (கடைக்குட்டி தங்கை மிகவும் சிறியவள்) மற்றும் அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள் இடையே யார் முதலில் ஆனந்த விகடன் படிப்பதென போட்டி நடக்கும். 

ஆனால் அது என்ன மாயமோ தெரியாது, ஒவ்வொரு வாரமும் எனக்குத்தான் முதலில் படிக்க சந்தர்ப்பம் கொடுப்பார்கள். சீக்கிரமாபடிச்சிட்டுக் கொடுக்கணும் என்ற கட்டளையுடன்.

அப்போதெல்லாம் அம்மாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். நான் சிறு வயதிலேயே கவிதைகள் எழுதுவேன். என்னை உற்சாகப் படுத்துவதுடன் ஆனந்த விகடனில் எழுதும் தகுதி வரவேண்டும் என்பார். இதுவரை எத்தனையோ கவிதைகள் அனுப்பியும் விகடனில் வரவில்லை என்பது வேறு விஷயம்.

அம்மாவும் (இப்போது உயிருடன் இல்லை) நானும் எழுத்தாளர் சுஜாதாவின் பரம ரசிகர்கள். “என் இனிய இயந்திரா”, “மீண்டும் ஜீனோ” எல்லாம் விகடனில் தொடராக வந்தபோது எங்கள் உயிராக இருந்தன.  பின் சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை”யை விரும்பிப் படித்தோம். 

இது மட்டுமன்றி நானும் அம்மாவும் இந்தக் கதைகளைப்பற்றி சிலாகித்துப்பேசிய நாட்களை இப்போது நினைத்தாலும் மனதில் குற்றாலத் தேனருவிதான்.

தாத்தாவும் விகடனின் பரம ரசிகர். வியாழக்கிழமை அன்றே, நாளை விகடன் வந்துவிடும் சுஜாதா தொடரைப்படிக்கணும் என தவித்துக் கொண்டிருப்பார்.

ஒரு வாரம் கூட அப்பா (இப்போதும் 85 வயதில்) விகடன் வாங்காமல் இருந்ததில்லை.

80களில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய “அது ஒரு நிலாக்காலம்” தொடர்கதையை நாங்கள் மிகவும் விரும்பிப் படித்தோம். அந்தக்கதைக்கு அரஸ் வரையும் படங்கள் அதி அற்புதமாக இருக்கும். நானும் என் நண்பர்களும் அரஸ் வரையும் படங்களுக்கு ரசிகர்களாக மாறியதெல்லாம் நிஜமான நிலாக்காலம்.

காதல் படிக்கட்டுகள் – ஸ்டெல்லா புரூஸ்!

விகடனில் மிக மிக அவசியமாய் நாங்கள் விரும்பிப் படிப்பது சினிமா விமர்சனம் தான். அழகான விமர்சனமும் அந்தப் படத்திற்கான மதிப்பெண்ணும் சுண்டி இழுக்கும். அப்பாதான் எங்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அவர் விகடன் விமர்சனம் படித்துவிட்டே படத்திற்கு அழைத்துச்செல்வார். மதிப்பெண் குறைவாக இருந்தால் அந்தப்படத்திற்கு அழைத்துச்செல்ல மாட்டார். 

அக்கால விகடனின் ஜோக்ஸ் மற்றும் கார்ட்டூன்களை மறக்கவே முடியாது. மதன் அவர்களின் அரசியல் கார்ட்டூன்கள் பிரமிக்கவைத்தன. ஆனந்தவிகடனில் வெளியான ஜோக்ஸ் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆசிரியரையே சிக்கலில் மாட்டிவிட்ட அரசியல் ஜோக் உண்டு. ஆனாலும் துணிச்சலாக தொடர்ந்து அரசியல் நையாண்டிகள் வெளிவந்தன. இன்றும் தொடர்கின்றன.

அக்கால காமெடியில் மிக முக்கியமாக “மிஸ்டர் எக்ஸ்” விளங்கியது. மிஸ்டர் எக்ஸ் ன் அப்பாவித்தனம் படிப்பவருக்கு கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்.

விகடனில் மற்றொரு காமெடி கேரக்டர் முன்ஜாக்கிரதை முத்தண்ணா! பயங்கர லூட்டி அடித்தார். மற்றொரு லூட்டி மனிதர் சிரிப்புத் திருடன் சிங்காரவேலு.

இவர்களெல்லாம் எங்களோடு ஒரு உண்மையான கேரக்டர் போல உலா வந்ததெல்லாம் என்றென்றும் நினைவில் நிற்கும். 

பெரிய முன் ஜாக்கிரதை முத்தண்ணா, போடா மிஸ்டர் எக்ஸ் என இவைகள் வாழ்க்கையில் இணைந்திருந்தன.

ஆனந்த விகடன் என்பது, தலையங்கம், சிறுகதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை, ஜோக்ஸ், சினிமா விமர்சனம் என ஒரு முழு பரிமாணத்துடன் திகழ்ந்தது. இப்போது அப்டேட் செய்யப்பட்டு காலத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.

நாங்களும் இப்போது விகடனை ஆப்பில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனந்த விகடன் என்பது அன்றும் சரி இன்றும் சரி வெறும் பத்திரிகை மட்டுமன்றி என் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. அது ஓர் அற்புத உணர்வு! இனியும் அவ்வாறே இருக்கும் எப்போதும் இணைந்து!

ரேவதி மகேஷ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *