
முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை உணவைப் பரிமாறி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 25.8.2023 அன்று திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து 15.7.2024 அன்று முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளில், இந்தத் திட்டம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூா் புனித சூசையப் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த திட்ட விரிவாக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்று மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும், முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டனர்.
தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 மாணவ, மாணவியர் பயன் பெறுகிறார்கள்.
தற்போது நகர்புறத்தில் அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 3.06 லட்சம் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாபிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஊக்கத்தை அளிக்கிறது.
மாண்புமிகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்தார்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதன் தாக்கத்தைக் கண்ட பிறகு, பஞ்சாபில் இதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து, விவாதங்களை நடத்துவதாகக் கூறினார்.
அவரின் இந்த முடிவுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது வார்த்தைகளால் என மனம் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்திருக்கிறது.
இந்தத் திட்டம் பஞ்சாபிலும் வடிவம் பெறும் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.