• August 26, 2025
  • NewsEditor
  • 0

முக்கிய மந்திரி லட்கி பெஹின் யோஜனா

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்தது.

`முக்கிய மந்திரி லட்கி பெஹின் யோஜனா’ என்ற அத்திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் மாநில அரசு, அவசர அவசரமாக அவர்களது வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1500-ஐ வரவு வைத்துக் கொண்டிருக்கிறது.

முக்கிய மந்திரி லட்கி பெஹின் யோஜனா

பயனாளிகள் பட்டியல் மறு ஆய்வு

இத்திட்டத்தை அமல்படுத்த ஆரம்பித்த பிறகு மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதையடுத்து இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் பட்டியலை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இத்திட்டத்தில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் மோசடியாக ஆவணங்களை தாக்கல் செய்து நிதியுதவி பெறுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் 26 லட்சம் போலி பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி பயனாளிகள் விவரம்

போலி பயனாளிகள் அதிகமானோர் துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயிக்கு செல்வாக்கான பகுதியில் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டேயின் தானே மற்றும் அகில்யா நகர் பகுதியில் மட்டும் 1.2 லட்சம் பேரும், நாசிக்கில் 1.8 லட்சம் பேரும், சத்ரபதி சாம்பாஜி நகரில் 1 லட்சம் பேரும் போலி பயனாளிகள் இருக்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே

அமைச்சர் ஹசன் முஸ்‌ரீப் தொகுதி இருக்கும் கோலாப்பூரிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி பயனாளிகள் இருக்கின்றனர். மும்பையில் அமைச்சர் ஆசிஷ் ஷெலார் பகுதியில் 1.1 லட்சம் பேரும், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் நாக்பூர் தொகுதியில் 95 ஆயிரம் பேரும் போலிகள் என்று தெரியவந்துள்ளது.

அஜித்பவார்

அஜித்பவார்சொன்ன பதில்

இத்திட்டத்தில் போலி பயனாளிகள் அதிக அளவில் இருப்பது குறித்து துணை முதல்வர் அஜித்பவாரிடம் கேட்டதற்கு, ஒட்டுமொத்தமாக இதனை நிறுத்திவிடவா என்று கேள்வி எழுப்பினார்.

போலி பயனாளிகள் அதிக அளவில் இருப்பதால் அனைத்து பயனாளிகளையும் முழுமையாக ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைவரிடமும் கே.ஒய்.சி வாங்க முடிவு செய்துள்ளது.

சிவசேனா (உத்தவ்) கண்டனம்

இது பற்றி சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பாஸ்கர் ஜாதவ் கூறுகையில்,” பெண் வாக்காளர்களை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு அவர்களை இப்போது தூக்கி எறிகின்றனர்.

முழுமையாக ஆய்வு செய்யும்போது 50 சதவீதம் பயனாளிகளை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்கள். அரசு பெண்களை பயன்படுத்திக்கொண்டது. இனி அவர்கள் தேவையில்லை”என்றார்.

தேவேந்திர பட்னாவிஸ்

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கவலை

இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ”இத்திட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பயனடைந்து வருகிறார்கள். அவை நிறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

தற்போது மாநிலம் முழுவதும் 2.25 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் அதிக பட்சம் 2 பேர் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் அந்த விதிகளுக்கு எதிராக ஒரே குடும்பத்தில் 2-க்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். தற்போது இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

`ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?’

அரசின் இத்திட்டத்தில் ரூ.2800 கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தெரிவித்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,”தகுதியான பயனாளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றனர். புனேயில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.

பெண்களுக்கான இத்திட்டத்தில் எப்படி ஆண்களை சேர்த்தார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பெண் போலி பயனாளிகளை என்ன செய்வது என்று தெரியாமல் மாநில அரசு திண்டாடி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *