
காதல், திருமணம், விவாகரத்து, மறுமணம் எனப் பெண்கள் தங்களது உறவுசார் முடிவுகளைத் தாங்களே எடுத்தால், கொந்தளிக்கும் குடும்பங்களும், சமூக அமைப்புகளும்தான் இங்கு வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆணாதிக்கத் திமிருக்கு, சமீபத்தில் தன் கணவரை பறிகொடுத்திருக்கிறார்… ராகவி.
மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி. கணவர், மூன்றாண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் உள்ள ராகவி, சென்ற மாதம் சதீஷ்குமார் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இதை அவமானமாகக் கருதிய ராகவியின் குடும்பத்தினர், திட்டம் தீட்டி சதீஷ்குமாரைக் கொலை செய்துள்ளனர்.இத்தனைக்கும் ராகவியும், சதீஷ்குமாரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். என்றாலும், இந்த ஆணவக்கொலையை அக்குடும்பம் நிகழ்த்தியிருப்பதற்குக் காரணம்… ஆணாதிக்க வெறி.
`பொண்டாட்டி செத்துப்போனா புருஷன் புது மாப்பிள்ளை’ என்று சொல்லும் சமூகத்தால், ‘புருஷன் செத்துப்போனால் பெண்டாட்டி புது மணமகள்’ என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
ஒரு பெண்ணை… குடும்பத்தின், ஆண்களின் உடைமையாகச் சித்திரித்து வைத்திருக்கும் இந்தச் சமூகம்… அவள், அடிமைப்பட்டே கிடக்க, ‘மானம்’, ‘மரியாதை’, ‘கௌரவம்’, ‘கற்பு’ ஆகியவற்றை எல்லாம் கற்பித்து வைத்துள்ளது. ‘நம் மதம், சாதி, வர்க்க வளையங்களுக்குள்தான், பெற்றோர் சொல்லும் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். மீறினால், அது குடும்பத்துக்கே, சாதிக்கே, மதத்துக்கே அவமானம்’ என்று அவளை நம்ப வைத்துள்ளது.
இதுவே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கற்பிக்கப்பட்டிருப்பதால், அம்மா, மாமியார், அத்தை, சித்தி என பெண்களும்கூட, `ஆணாதி’க்கப் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டிய கட்டாயச்சூழல் உருவாகிக் கிடக்கிறது. இந்தக் கொடுஞ்சங்கிலி இணைப்பு, பெருமளவு பெண்கள் படித்து மேலெழுந்து கொண்டிருக்கும் இந்த இணையதள காலத்திலும் அடித்து நொறுக்கப்படாமலேயே நீடிப்பதுதான் வேதனை.
காதல் திருமணங்கள், விவாகரத்துகள், மறுமணங்கள் என, பெண்கள் துணிந்து முடிவெடுக்கும், அதற்கு ஆதரவளிக்கும் மாற்றங்கள் மெதுவாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதன் சதவிகிதம் மிக மிகக் குறைவு. மாறாக, இவற்றுக்கு எல்லாம் மூடர்களாகவும், மூர்க்கமாகவும் எதிர்வினையாற்றும் குடும்பங்களே இங்கு அதிகம்.
திருமணம், மறுமணம் எனத் தங்களுக்கான ஆண் துணையை ஒரு பெண், தானே தேர்ந்தெடுத்துவிட்டால்… கொலையே செய்யுமளவுக்கு அக்குடும்பங்கள் செல்கின்றன என்றால்… எந்தளவுக்கு ஆபத்தானது இந்த ஆதிக்க, உடைமை மனநிலை?
‘பெண்கள் குடும்பத்தின்… ஆண்களின் உடைமை’ என்கிற மனநிலை முதலில் களையெடுக்கப்பட வேண்டும் தோழிகளே. காதல் திருமணங்களுக்கும், மறுமணங்களுக்கும் நம் ஆதரவு இன்னும் சத்தமாக ஒலிக்க வேண்டும். ‘அது அவமானம்’ என்ற எண்ணத்தைக் குடும்பங்களிடமிருந்து துடைத்தெறிய வேண்டும். அதெல்லாம் முதலில் பெண்களிடமிருந்தே உருவாக வேண்டும். ‘ஆணாதிக்கத்துக்கும்’, ‘கற்பிதங்களுக்கும்’ அடிமைப்பட்டுக் கிடக்காமல், ராகவிகளுக்கு ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பை… ஏற்போம் தோழிகளே, நாம் ஒவ்வொருவரும்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்