
ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
ஜஸ்வந்த் வர்மா என்ற அந்த விமானி பயணிகளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்கினார்.
“இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். ஏனென்றால் என்னையும் பைலட் ஆக்கவேண்டும் என்ற என் கனவையும் ஆதரித்த நபர், என் அம்மா, முதல்முறையாக என்னுடன் இங்கே பயணம் செய்கிறார். அவருக்காக ஒரு கைதட்டல் வழங்குங்கள்.” எனப் பேசியுள்ளார்.
மேலும், “நாங்கள் திருப்பதிக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமத்திலிருந்து வருகிறோம். பைலட் ஆகவேண்டும் என்ற சிந்தனை எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் என் அம்மா தான் முன்வந்து என்னுடைய ஒவ்வொரு போராட்டம், தூக்கமில்லாத இரவுகள், நிச்சயமாக கல்விக் கடன் EMI- கட்டுவதிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
அவரால்தான் இங்கே ஒரு கேப்டனாக நின்றுகொண்டிருக்கிறேன், விமானத்தை இயக்குகிறேன், அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளேன், என் கனவு வாழ்க்கையை வாழ்கிறேன்.” என்றார் ஜஸ்வந்த்.
பின்னர் அவர் அம்மாவை நோக்கி, “உங்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும், இது எல்லாமும் உங்களால்தான். நீங்கள் இல்லையென்றால் நான், இல்லை” என்றார் உணர்ச்சிவசமாக.
விமானி ஜஸ்வந்த் வர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பலரும் நெகிழ்ச்சியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.