
சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் (21). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் தன்னுடைய நண்பர்களுடன் 24-ம் தேதி மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கிங்ஸ்டனிடம் பேசினர். பின்னர் கிங்ஸ்டனை காரில் ஏறும்படி அந்தக் கும்பல் கூறியது.
அதற்கு கிங்ஸ்டன் மறுக்க, ஒரு பெண்ணின் பெயரைக் கூறி, அவரின் காதலன் குறித்து பேச வேண்டும் என அந்தக் கும்பல் கூறியது. இதையடுத்து கிங்ஸ்டன் அந்தக் காரில் ஏறியிருக்கிறார்.
பின்னர் செல்லும் வழியில் கிங்ஸ்டனின் நண்பன் ரோகித்தையும் அந்தக் கும்பல் காரில் ஏற்றி அழைத்து சென்றிருக்கிறது.
இதைக் கவனித்த கிங்ஸ்டனின் நண்பர்கள், தங்களின் டூவிலரில் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து காசிமேடு பகுதியில் கார் நிற்கவும் கிங்ஸ்டன், ரோகித் ஆகியோர் காரை விட்டு இறங்கினர்.
அப்போது காரைப் பின்தொடர்ந்து வந்த கிங்ஸ்டனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் அந்தக் கடத்தல் கும்பல் காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதையடுத்து கிங்ஸ்டன் தரப்பில் தன்னையும் தன் நண்பரையும் ஒரு கும்பல் காரில் கடத்திய தகவலை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கிங்ஸ்டன், ரோகித்தை கடத்தியது வேளச்சேரியைச் சேர்ந்த மோகன்தாஸ் (21), ஆர்.ஏ புரத்தைச் சேர்ந்த தனுஷ்ராஜ் (22), பள்ளிக்காரணையைச் சேர்ந்த சாய் பிரசன்னா (21), பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன், பள்ளிக்காரணையைச் சேர்ந்த அபிஷேக் எனத் தெரியவந்தது.

அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மோகன்தாஸ் என்பவர் கல்லூரி மாணவர். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணுடன் கிங்ஸ்டன் பழகி வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிங்ஸ்டனை கடத்திச் சென்றிருக்கிறார்.
அப்போது கிங்ஸ்டனுக்கு ஆதரவாக பேசிய ரோகித்தையும் இந்தக் கும்பல் கடத்தியிருக்கிறது. இதையடுத்து 5 கல்லூரி மாணவர்களையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.