
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேசுபொருளாகியிருக்கிறது.
வன்னியரசுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், “வன்னி அரசு பேச்சுக்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்து தர்மத்தைப் போற்றும், தீவிரமாக பின்பற்றும் பக்தர்களில் ஒருவராக கண்டிக்கிறேன்.
நான் அதற்காக மற்ற மதங்களை தாழ்வாக கருதியதில்லை. ராமன் ஏதோ ஒரு பிராமணருக்காக பழங்குடியைக் கொன்றாராம். இவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பேசியிருக்கிறார்.” என்றார்.
சமூகநீதி காத்த ராமன்!
மேலும், “ராமர் பழங்குடி பெண் சபரி கொடுத்த பழத்தை வாங்கி சாப்பிட்டார். வானர இயக்கத்தைச் சேர்ந்த அனுமன் உடன் நின்றார். விபீஷணனுக்கு உதவி செய்தார். நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? சமதர்ம தர்மத்தை உடையவர், சமூக நீதியைக் காத்தவர் ராமர்.
ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை ஸ்டாலின் அரசுக்கு. ஆணவக்கொலைக்கு காரணம் சனாதன தர்மமாம், ராமனாம்.” எனக் காட்டமாகப் பேசினார்.

ஏன் தனிச்சட்டம் கொண்டுவரவில்லை?
அத்துடன், “உங்கள் ஆட்சி ஏன் ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கொண்டுவர முடியவில்லை. ராஜஸ்தானில் சிறப்பு சட்டம் உள்ளது. உ.பி, ஹரியானாவில் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க சட்டம் உள்ளது.
நீங்கள் ஆளுகின்ற மாநிலத்தில் இளைஞர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அதைப் போய் பார்க்கக்கூட உங்களுக்கு முடியாது. ஆனால் ஆணவக்கொலைக்கு இராமன், இந்து தர்மம் காரணம் என என்ன ஆணவத்தோடு பேசுகிறீர்கள்?
ராமனைக் கும்பிடுபவர்கள், இந்து தர்மத்தைப் போற்றுகிறவர்களின் ஒரு ஓட்டு கூட இண்டி கூட்டணிக்கு விழக் கூடாது.
முதலில் ஆணவக்கொலையைத் தடுக்க ஸ்டாலினிடம் போராட்டம் நடத்துங்கள். கூட்டணிக்காக கூழை கும்பிடு போட்டு உட்காந்திருக்காதீர்கள். ஆணவக்கொலைக்கு மாநில அரசின் அஜாக்கரதையும், சட்ட ஒழுங்கும், ஸ்டாலின் ஆட்சியும்தான் காரணம். ஆணவக்கொலையைத் தடுக்க துப்பில்லாமல், அந்த ரத்தத்தில் ஆட்சி நடத்திக்கொண்டு ராமனை நிந்திக்கிறார்கள்.” எனக் கண்டித்தார்.