ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுமென அறிவித்தார்.
இதற்கு எதிர்வினை ஆற்றிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆணவக்கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ பேர் (காதலர்கள்) வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். ஒன்றல்ல, ரெண்டல்ல தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.
நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறோம்.
சாதி சமுதாயத்தில் உள்ள ஒரு புற்றுநோய் போன்றது, இன்று உடலையே அரிக்கத் தொடங்கிவிட்டது. இந்து சமுதாயத்தினுடைய மிகப் பெரிய பிரச்னை சாதிப் பிரச்னை.
நாம் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், சில இடங்களில் மேல் சாதி, கீழ் சாதி என்ற மனநிலை வருகிறது. பள்ளிகளில் பாடத்திட்டங்களை சரி செய்ய வேண்டும், பள்ளிக்கூடங்களை சரிசெய்ய வேண்டும். அரசுகள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ள ஒருவர் சாதி ரீதியாக கொலை செய்தாலும் அவரை மைனராக கருதக் கூடாது.

தமிழ்நாடு அரசு கடுமையான சட்டத்தைக் கொடுவர வேண்டும். அதில் முக்கியமாக 16,17 வயதினர் கொலை செய்தாலும் மேஜராக கருதப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் சாதிய வன்மத்தை 16,17 வயதிலேயே நான் பார்க்கிறேன். பள்ளிகளில் கயிறு கட்டிக்கொண்டு செல்கிறார்கள், சாதிய குழுக்கள் இருக்கின்றன, அரிவாள் கலாச்சாரம் இருக்கிறது.
இன்று திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். சாதியை ஒழிக்கத்தான் திராவிடம் வந்தது என்கிறோம். 2025-லும் இந்த பிரச்னை இருக்கிறது என்றால் அது தோற்றுவிட்டதாகதானே அர்த்தம்.
ஆணவக்கொலைகளுக்கு அரசு கடுமையான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் பாஜகவினர் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.