
டப்பிங் யூனியனில் இருந்து டப்பிங் கலைஞரும் நடிகருமான ராஜேந்திரன் ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இணைச் செயலாளர், துணைத் தலைவர் என அந்த யூனியனில் பல பொறுய்ப்புகளை வகித்த அவர் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை குறித்து டப்பிங் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கும் மேலாக யூனியனுடன் தொடர்பில் இருப்பவர் அவர். ஆரம்பத்துல இருந்தே ராதாரவி அணியில்தான் இருந்தார். இணைச் செயலாளர், பிறகு துணைத் தலைவர்னு பொறுப்புகள்ல இருந்தார். டப்பிங் கலைஞர்கள் வாழ்க்கை மேம்பட பல யோசனைகளைத் தந்திருக்கார்.
சங்கம் வழக்குகளைச் சந்திச்சப்பெல்லாம் ராதாரவிக்கு வலதுகரமா இருந்து பிரச்னையைத் தீர்க்க உதவியிருக்கிறார்.
ஆனா இடையில என்ன நடந்ததுனு தெரியல. ராதாரவிக்கும் இவருக்கும் இடையில் விரிசல் உண்டாச்சு. ஒருகட்டத்துல ராதாரவியையே எதிர்த்து தேர்தல்ல நிக்கற வரைக்கும் வந்திடுச்சு. கடந்த தேர்தல்ல ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனா தேர்தல்ல தோல்விதான் கிடைச்சது. ஆனா கணிசமா வாக்குகள் வாங்கியிருந்தார்.
இந்தச் சூழலல் இப்ப யூனியன்ல இருந்து ஒரு மாதத்துக்கு சஸ்பெண்ட்னு அறிவிச்சிருக்காங்க. எதுக்கு ஒரு மாத காலம்ங்கிறது தெரியலை. முதல்ல இப்படி அறிவிச்சிட்டு பிறகு நிரந்தரமா அவரை நீக்கற வாய்ப்புக் கூட இருக்கிறதா பேசிக்கிடுறாங்க” என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத சில உறுப்பினர்கள்.
ராஜேந்திரனைத் தெரிந்த சிலரிடம் பேசிய போது,
“யூனியன்ல சீனியர் உறுப்பினர் அவர். ஏகப்பட்ட பேருக்கு பேசியிருக்கார். மறைந்த கோட்டா சீனிவாச ராவ் இவர் மட்டுமே தனக்குப் பேசணும்னு கேட்டுக்கிட்டார். யூனியனின் செயல்பாடு தொடர்பா ஏதோ கேட்டார்னு சொல்றாங்க. டப்பிங் யூனியனில் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவினு ஒரு விஷயம் பண்ணுவாங்க. சமீபமா அது வழங்கப்படலைனு சங்கத்துக்கான வாட்ஸ் அப் குழுவுல கேட்டதா தெரிய வருது. சங்க விவகாரத்தை வெளியில் இப்படி விவாதிக்கக் கூடாதுனுதான் இந்த நடவடிக்கையாம்” என்கின்றனர்.
ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டோம்,
‘இது தொடர்பா இப்ப எதுவும் பேச விரும்பலைங்க’ என முடித்துக் கொண்டார்.