• August 25, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு இளம்பெண், திருநங்கை என வரிசையாக பாலியல் தொல்லை புகார் கூறினர். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை கடந்த 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதற்கிடையே அவர் கர்ப்பமான ஒரு பெண்ணின் கருவை கலைக்க வலியுறுத்தும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ உமா தாமஸ் குரல் கொடுத்தார். உமா தாமஸ் கூறுகையில், “ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்யான குற்றச்சாட்டு என்றால் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைமை வலியுறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி எல்லா காலத்திலும் பெண்களுக்கு ஆதரவாகத்தான் இருந்துவருகிறது. ராகுல் மாங்கூட்டத்தில் விஷயத்தில் காங்கிரஸ் தொடக்கத்தில் இருந்தே நல்லபடியாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

உமா தாமஸ் எம்.எல்.ஏ

ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும், விமர்சனக்களும் எழுந்த நிலையில் அவர் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கட்சி விசாரணை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி கட்சி வலியுறுத்தவில்லை.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மாங்கூட்டத்தில்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடந்து ராகுல் மாங்கூட்டத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ கணக்கில் அடங்குவார். எனவே அவருக்கு சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது ராகுல் மாங்கூட்டத்தில் விடுப்பு எடுக்கும் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *