• August 25, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமாக இரு அணிகளும் கடந்த 13 ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாமல் இருக்கின்றன.

டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் கடைசியாக 2007-ல் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின.

அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கடைசியாக 2012 டிசம்பரில் ஆடியது.

அதன்பிறகு, ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

இந்தியா vs பாகிஸ்தான்

இவ்வாறிருக்க, கடந்த ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய பாகிஸ்தான் இடையே மோதலுக்கு வழிவகுக்கவே, இனி பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டியிலும் இந்தியா ஆடக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்தன.

அதற்கேற்றாற்போலவே, ஓய்வுபெற்ற வீரர்கள் ஆடும் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் ஆட இந்தியா மறுத்துவிட்டது.

ஆனால், அடுத்த சில நாள்களில் வெளியிடப்பட்ட ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்படி ஒரே குழுவில் இடம்பெறச் செய்து செப்டம்பர் 14-ம் தேதி போட்டி திட்டமிடப்பட்டது.

இதற்கு, இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திலும் லாபம் பார்க்க வேண்டுமா என பிசிசிஐ மீது எதிர்ப்புகள் வந்தன.

இத்தகைய சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இதை வெளிப்படுத்திய வாசிம் அக்ரம், “இந்தியா, பாகிஸ்தானின் மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் (டெஸ்ட்) சுவாரஸ்யமாக இருக்கும்.

இரு அணிகளின் வீரர்களும் ரசிகர்களும் ஒழுக்கமாகவும், எல்லை மீற மாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.

வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம்

இந்தியர்கள் தேசபக்தி கொண்டவர்களாகவும், தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் எனவும் விரும்பினால், பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் அது பொருந்தும்.

இந்தியா சமீப காலமாக சிறந்த ஃபார்மில் உள்ளது. இருப்பினும், போட்டி நடக்கும் நாளில் அழுத்தத்தை சிறப்பாகக் கையாளும் அணிதான் வெற்றிபெறும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்.

இது நடந்து மிக நீண்ட காலமாகிவிட்டது. நடந்தால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியாக இது இருக்கும்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *