
புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையம் வழங்கிய அனுமதியை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பிஏ பட்டம் பெற்றதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் நோக்கில் நீரஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த அனைத்து மாணவர்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்" என கோரி இருந்தார். அவரது இந்த கோரிக்கைக்கு தகவல் உரிமை ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.