
புதுடெல்லி: “ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்?” என்று அமித் ஷாவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சிறிய குற்றங்களுக்கு இந்த மசோதா பொருந்தாது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஒரு வழக்கில் ஒருவர் சிறைக்குச் சென்று 30 நாட்களில் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அல்லது ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற அமைச்சரோ, முதல்வரோ, பிரதமரோ சிறையில் இருந்து கொண்டே அரசாங்கத்தை நடத்துவது எந்த அளவுக்கு நியாயம்?" என தெரிவித்திருந்தார்.