
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…
அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்கில் உட்கார்ந்து செஞ்சுட்டு இருப்பாங்களா? என்று கேட்தற்கு,
“அட செய்வாங்கப்பா, மதுரை ஆரப்பாளையத்தில் இப்பவும் மண்சிலையை கையால் வடிவமைத்து செய்கிறார்கள்” என்றார் அந்த நண்பர்.
மதுரை ஆரப்பாளையம் சென்று அந்த தொழிலாளர்களை சந்தித்து தொழில் பின்னணி குறித்து அவர்களிடம் கேட்டோம்,
“நான் 20 வருடங்களுக்கு மேலாக சிலை செய்யும் பணியை செய்து வருகின்றேன். சுண்ணாம்பு, பிளாஸ்டர் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மண், யானை சாணம் போன்றவற்றை பயன்படுத்தி இங்கே உள்ள தொழிலாளர்கள் சிலை செய்கின்றார்கள்.
எனது தந்தையின் தொழிலைக் கற்றுக்கொண்ட நான், பதிமூன்று வயதில் இருந்து சிலை செய்யத் தொடங்கினேன்” என்றார் வேலாயுதம்.
சிலைத் தயாரிப்பிற்கான மண், கரம்பை, யானை சாணம் போன்றவற்றை கலந்து மண்ணைத் தயார் செய்து பூஜை செய்து சிலை செய்யத் துவங்குகின்றனர்.
சிலை செய்யும் தொழிலாளர் வேலாயுதம் நம்மிடம் இதுகுறித்து விரிவாக பேசுகையில்,
“விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மண்ணைத் தயார் செய்யத் துவங்கினால்தான் சிலை செய்து முடிக்க ஏதுவாக இருக்கும்.
ஒரு சிலை செய்வதற்கு குறைந்தது பத்து நாள்களுக்கு மேல் ஆகிறது, கைகளால் பார்த்து பார்த்து செய்வதால் அதிக நேரம் செலவாகிறது.
விநாயகர் சதுர்த்திக்காக மண்ணை சுடாமல் சிலை செய்தால்தான் கரைப்பதற்கு வசதியாக இருக்கும்.

ரெண்டு மாசம் முன்னாடியே வேலையை ஆரம்பிச்சிருவோம். சிலை செய்வதற்கு பத்து நாள் ஆகும். ஆனால், மக்கள்பிளாஸ்டர் சிலைதான் விரும்புவாங்க அது தண்ணிக்கு ரொம்ப கேடு மீன்களெல்லாம் சாப்பிட்டுட்டு செத்துடும். அதுக்கு தடை விதித்து விட்டார்கள். ஆனால் நம்ம சிலை அப்படி இல்லை நம்ம எல்லாமே இயற்கை பொருள்களில் பண்றதால மீனுக்கு சாப்பாடாக மாறிடும்” என்றார்.
தற்போதைய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கும் மண் சிலைகளுக்குமான உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டபோது,
“இன்றைய நவீன உலகில் சுண்ணாம்பு, பிளாஸ்டர் சிமென்ட்டில் சிலை செய்ய பத்து நிமிடங்களே அதிகம். ஆனால், மண்ணை தயார் செய்து சிலை செய்ய பத்து நாள்களுக்கு மேல் ஆகும்.
ஆனாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயார் செய்கின்றனர். மண்ணால் செய்யும் விநாயகர் சிலைகள் எளிதில் நீரில் கரையும் தன்மையுடையவை. ஆனால் பிளாஸ்டர் சிலைகள் நீரில் கரைய காலம் எடுக்கின்றன மேலும் நீரை மாசுபடுத்துகின்றன.” என்றார் வேலாயுதம்.
எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
மண்ணால் செய்யும் சிலைகளுக்கு நேரமும், வேலையும் அதிகம் என்பதால் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது, இதனால் மக்கள் மண் சிலைகளைத் தவிர்க்கின்றனர்.
முந்தைய காலங்களில் இருந்த அளவிற்கு தற்போது மண் சிலைகளுக்கு மவுசு இருப்பதில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மண்சிலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
சில மக்கள் மட்டுமே மண் சிலைகள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி வருகின்ற குறுகிய எண்ணிக்கையிலான சிலைகளை செய்கையில் மழை பெரிய சவாலாக இவர்களுக்கு அமைகிறது.
சிலை செய்கையில் மழை வந்துவிட்டால் சிலையின் அமைப்பு மாறிவிடும் நிலை உருவாகிறது.





மழை பெரிய சவால்
“மழை பெரிய சவால் மூடி மூடி வைச்சுதான் செய்வோம் அதுமட்டுமில்லை இவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சாலும், மக்கள் விலை கம்மியென்று பிளாஸ்டர் சிலைகளைத் தேடித்தான் போறாங்க எங்க கூலிக்கூட சரியாக வராது எங்களுக்கு பெரிய லாபம் ஏதும் கிடையாது இருந்தாலும் நல்ல முறையிலதான் பண்ணணும்னு தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம்” என்றார்.
தொழில், வருமானம் எப்படி?
பண்டிகை காலத்தில் வருமானம் போதுமான அளவிற்கும் மற்ற நாட்களில் மிகவும் குறைவாகவே கிடைப்பதாகவும், ஆனி முதல் புரட்டாசி மாதம் வரை மட்டுமே சீசன் அதன் பிறகு திருஷ்டி பொம்மைகள் செய்வதே வாழ்வாதாரமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
“மக்களின் விருப்பமும் ஆர்வமும் மாறி வருவதால் பண்டிகை காலங்களில்கூட நல்ல வருமானம் கிடைப்பதில்லை, பரம்பரை தொழில் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே செய்து வருகிறோம்” என்று தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

“சீசனில் மட்டும் சிலை செய்வோம் மற்ற டைமில் குதிரை, திருஷ்டி பொம்மையென்று செய்வோம். எனக்கு மூன்று அக்கா எல்லாரையும் கட்டிவைச்சுட்டேன். மாமாவும் சிலை தான் செய்கிறாங்க நானும் சின்ன வயசுல இருந்து சிலை தான் செய்றேன்.
எட்டாவது படிச்சு முடிச்சதும் சிலை செய்ய ஆரம்பிச்சேன் என் தொழில் இதுதான் நாளைக்கு எனக்கு குழந்தைங்க பிறந்தா அவங்களுக்கும் கண்டிப்பா இது சொல்லிக் கொடுப்பேன்.
எங்களை தேடி வந்து மக்கள் ஆர்டர் தருவாங்க ஆனால் இந்த வருசம் ரொம்ப மோசம் மொத்தமே 7 சிலைதான் ஆர்டர் வந்துச்சு மக்கள் கொஞ்சம் யோசிச்சு பழையபடி மண்சிலை பக்கமே திரும்பினாதான் எங்க வாழ்க்கையும் பூமியும் நல்லாருக்கும்” என்கிறார் வேலாயுதம்.