
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வழக்கம்போல இன்று காலை அந்த மாணவர்களை வேனில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர், வேனை அதிவேகமாக இயக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போது பூவனூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கிறார். அப்போது பிரேக் செயலிழந்ததால் தடுப்புக் கட்டையில் மோதிய வேன், தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த சத்தத்தையும், பள்ளிக் குழந்தைகளின் அலறலையும் கேட்டு ஒடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயங்களுடன் இருந்த குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல வேளையாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அந்த மாணவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், “அதிவேகமாக வேனை இயக்கிச் சென்ற ஓட்டுநரின் கவனக் குறைவுதான் விபத்துக்கு காரணம்” என்று கூறியிருக்கிறார் கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.
அதையடுத்து பள்ளி வேன் மீது குற்றவியல் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது ரயில்வே காவல்துறை. கடந்த மாதம் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.