
ஆரோவில் சர்வதேச நகரம்
புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில் சர்வதேச நகரம். ஸ்ரீஅரவிந்த அன்னையின் கனவு பூமியான இந்த சர்வதேச நகரத்தில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்ட ஜெயந்தி ரவி தலைமையிலான நிர்வாகக் குழு, அன்னையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிரவுன் சாலை பணி
அதன்படி மாத்ரி மந்திரைச் சுற்றி 4 கிலோமீட்டருக்கு கிரவுன் சாலை அமைக்கும் பணி முதலில் துவங்கப்பட்டது. அதற்கு ஆரோவில் வாசிகளில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் நீதிமன்றம் வரை சென்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதையடுத்து மாத்ரி மந்திரைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும்படி ஏரி அமைக்கப்பட்டு வருகிறது.
ஐ.ஐ.டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அதையடுத்து சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்துடன் ஆரோவில் நிர்வாகம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி, ஆரோவில்லில் பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ஆரோவிலில் அமைய இருக்கிறது.
அதற்காக வானூரில் 130 ஏக்கரில் பசுமையுடன் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா விவசாயப் பண்ணையில், 100 ஏக்கர் நிலத்தை சென்னை ஐ.ஐ.டி-க்கு வழங்க இருக்கிறது ஆரோவில் நிர்வாகம்.
எதிர்ப்பு
இதற்கு ஆரோவில் வாசிகளும், சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆரோவில் வாசிகள் சிலர், “ஆரோவில் நிர்வாகம் ஆக்கப்பூர்வமாக கொண்டு வரும் திட்டங்களை நாம் வரவேற்கிறோம்.
அதேசமயம் மாத்ரி மந்திரைச் சுற்றி கிரவுன் சாலை அமைப்பதற்காக, ஏற்கெனவே நூற்றுக்கணக்கான பசுமையான மரங்களை வெட்டி சாய்த்து விட்டனர்.
தற்போது சென்னை ஐ.ஐ.டி-க்காக பசுமையாக இருக்கும் 100 ஏக்கர் விவசாயப் பண்ணை அழிக்க இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆரோவில் நிர்வாகத்தின் இந்த செயல் ஆரோவில் உருவாக்கப்பட்ட நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானது” என்றனர்.
ஆரோவில் நிர்வாகம் விளக்கம்
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் ஆரோவில் நிர்வாகம், `ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அன்னபூர்ணா பண்ணை அமைந்திருக்கிறது.
அங்கு 30 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. மீதமிருக்கும் நிலம் சரியாக பயன்படுத்தப்பட வில்லை. கடந்த பல ஆண்டுகளாக பண்ணை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
அதனால் அன்னபூர்ணாவில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் சென்னை ஐ.ஐ.டி வளாகம் கட்டப்படும். இங்கு வேலை செய்பவர்களுக்கு மாற்றுப் பண்ணையில் வேலை வழங்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறது.