
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்த ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், சந்தோஷ் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றுடன் ஊருக்கு வந்தனர்.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உறவினர்களும் அதை காண்பித்து வந்துள்ளனர். சந்தோஷ், சிவகாமி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யாவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர்கள் மூலமாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பெயரில் கடந்த 20ஆம் தேதி போலீசார் சந்தோஷின் வீட்டிற்கு நேரில் விசாரணைக்கு சென்றபோது, அவர்களது வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகாமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதனை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக ரஞ்சித் என்பவருக்கு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 14ஆம் தேதி விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தந்தை சந்தோஷ், குழந்தையின் தாய் சிவகாமி, புரோக்கர் தேவராஜ், ரஞ்சித் ஆகிய நான்கு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை பெற்றோர்களே ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.