• August 25, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை.

47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணை 1971-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணைகளை நம்பி சுமார் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது. பிளவக்கல் பெரியாறு அணையின் அருகிலேயே பூங்காவும் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரானா காரணமாக பொதுமக்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பூங்காவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறை நாள்களில் வரக்கூடிய பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்தும் பூங்கா பாழடைந்தும் காணப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா தளமாக திகழக்ககூடிய இந்த பூங்காவை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

மேலும் பூங்கா பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படாத நிலையில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

பிளவக்கல் பெரியாறு அணை

இந்த பூங்காவை தமிழக அரசு சீரமைத்து சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் நீரூற்றுகள், பயணிகள் தங்கிச் செல்வதற்கு போதுமான அறைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மேலும் இயற்கை ரசிப்பதற்காவது பூங்காவிற்குள் பொதுமக்களை அனுமதிக்க வேண்டுமென அனைவரின் எதிர்பார்பாக இருந்தது.

தமிழக முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வுக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், அப்பொழுது வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைப்பதற்காக 10 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.

பிளவக்கல் பூங்கா

இந்த நிலையில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க 10 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பூங்காவில் 3 கி.மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. கிழவன் கோயில் பள்ளிவாசல் முதல் பெரியாறு அணை பூங்கா வரை இரண்டரை கி.மீட்டர் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்

விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கப்படவும் உள்ளது. மேலும் மான் சிலை, காந்தி காலை, காளை, பாரத மாதா, ரயில், பார்வையாளர் கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு, கழிவறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது.

பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *