
அனைவருக்கும் பசுமை வணக்கம்..!
‘விருத்தாசலம் கோட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், கோட்டத்தின் தலைவரான ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளே பங்கேற்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், கூட்டத்தைப் புறக்கணித்தனர்.’
‘திருப்பூர் வருவாய் கோட்ட அளவில் கடமைக்காக மட்டுமே குறைதீர்க் கூட்டம் நடத்தப்படுவதால், விவசாயிகள் வேதனை.’
மேற்கண்ட இரண்டு செய்திகளும் தமிழகம் முழுவதும் காலகாலமாக நடத்தப்பட்டு வரும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களுக்கு இரண்டு சோறு பதம்.
‘எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம்… ஆனால், விவசாயம் காத்திருக்கக் கூடாது’ என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்.
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவையெல்லாம் உரிய வகையில் விவசாயிகளுக்கு உதவுகின்றனவா… வேறென்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் அரசாங்கம் தெரிந்துகொள்ளத்தான், மாவட்டம்தோறும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் என்பதே உருவாக்கப்பட்டது. இதில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை எனப் பல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அவர் இல்லையென்றால் துணை ஆட்சியர் நடத்துவார். சில சமயங்களில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வேளாண் இணை இயக்குநர் என மாவட்ட அளவில் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் உள்ள, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்காமல் மட்டம் போடுபவர்கள்தான் இவர்களில் அதிகம். கோட்ட அளவிலான பிரச்னைகளை, மாவட்ட குறைதீர்க் கூட்டங்களுக்குக் கொண்டுவராமல், கோட்ட அளவிலேயே தீர்த்து வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் இதே கொடுமையே!
திருப்பூரில் 45 அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்தில் 18 அதிகாரிகள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் பலரும், முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஏதுமற்ற அடுத்த நிலை அலுவலர்கள்தான்.
தங்களின் குறைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான், அன்றாட வேலைகளையெல்லாம் முன்கூட்டியே முடித்துவிட்டு, கைகளில் மனுவோடு இத்தகைய கூட்டங்களில் குவிகிறார்கள் விவசாயிகள்.
அதிகாரிகளுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும்விட முதன்மையானது விவசாயம் என்பதை உணர மறுப்பது, நாட்டின் சாபக்கேடு. பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அப்படி நடப்பதே இல்லை என்பதே கடைந்தெடுத்த உண்மை.
“இப்போது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று புறப்பட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு தடவை… ஒரே ஒரு தடவை விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்துக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தி ‘எங்களுடன் ஸ்டாலின்’ என நிற்பாரா?” என ஏங்குகிறார்கள் விவசாயிகள்.
அவர்கள் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்… வழக்கம்போல ‘செட்’ போடாமல் அதிரடியாக வர வேண்டும் என்பதுதான்.
நடக்குமா?
– ஆசிரியர்