• August 24, 2025
  • NewsEditor
  • 0

ஜகதீப் தன்கர் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் திடீரென குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவரின் திடீர் ராஜினாமா அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தவே, இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என இன்றுவரை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

சுதர்சன் ரெட்டி – சி.பி.ராதாகிருஷ்ணன்

அதேசமயம், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில், தமிழர் என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக ஆளும் தி.மு.க கூட்டணி ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன், தன்கரைப் போல சி.பி. ராதாகிருஷ்ணனும் மறைந்துவிடக்கூடாது என்று கவலைப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில் சு. வெங்கடேசன், “ஜகதீப் தன்கர் என்னவானார்? மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையிலிருந்து வீட்டுக்குப் போனார், அதற்குப் பிறகு இப்பவரைக்கும் அவர் என்னவானார், எங்கு இருக்கிறார் என்ற எந்தவொரு தகவலும் இல்லை.

எங்களது கவலையெல்லாம் அதேபோல சி.பி. ராதாகிருஷ்ணனும் ஆகிவிடக்கூடாது என்பதுதான். நாங்கள் பேசுவது சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் சேர்த்துதான்.

தன்கர் மறைந்ததைப் போல நீங்கள் மறைந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த உங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது.

எங்களிடம்தான் சொல்லவில்லை, உங்களிடமாவது சொன்னார்களா தன்கரைப் போல உங்களை ஆக்கிவிடமாட்டோம் என்று.

அது ஒரு மாய நாற்காலி. அமித் ஷா, மோடி பார்வையில் ஒரு நிமிடம் நீங்கள் தவறாகத் தென்பட்டால் அடுத்த நிமிடம் என்ன ஆவீர்கள் என்று தெரியாது.

தன்கரை விட விசுவாசமானவர் உண்டா? மாநிலங்களவை வரலாற்றில் இவ்வளவு மோசமான ஒரு குடியரசு துணைத் தலைவர் யாரும் கிடையாது.

எதிர்க்கட்சிகளை அவ்வளவு மோசமாக நடத்தினார். ஜனநாயக மாண்புகளை காலில் போட்டு மிதித்தார். அத்தகைய தன்கருக்கே இதுதான் கதி.

இன்றைக்கு 65 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனதற்கும் நாங்கள்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் காணாமல் போனதற்கும் குரல் கொடுக்க வேண்டியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *