
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் மக்கள் உரிமை கோரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் இன்னும் 8 நாட்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இன்று கூறியுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து, அதை சரி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த காலகட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்துவது மட்டுமின்றி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது அதற்கான படிவத்துடன் மக்கள் சமர்ப்பிக்க தவறிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.