
திருவனந்தபுரம்: சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி, பம்பையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது. கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். திருவாங்கூர் தேவசம் போர்டின் 70-ம் ஆண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளது. தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வசவன், மு.க. ஸ்டாலினை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.