
புதுச்சேரி: பாஜகவுடன் செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கராகிவிட்டார். பழனிசாமிக்கும் கட்சிகளுக்கும் இடையே போட்டி இல்லை. அவருக்கும் ஆம்புலன்ஸிற்கும் தான் இப்போது போட்டி. அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முதல்வர், காமராஜர் வழி வந்தவர். மூத்த தலைவர். புதுச்சேரி மாநில பொறுப்பாளராக ஜெயலலிதாவால் நான் நியமிக்கப்பட்டு ஓம்சக்திசேகருக்கு தேர்தல் பணியாற்றும்போது ரங்கசாமியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் போற்றுதலுக்குரிய தலைவர். புதுச்சேரியின் தந்தையாக உள்ளார். மக்களின் செல்வாக்கை பெற்றவர். ஆகவே மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இப்போது எந்தவித அரசியலும் இல்லை.