
மதுரை மாநகராட்சியில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வார்டுகளில் தினமும் காலையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த காலத்தில் வாரத்துக்கு சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் பெற்ற மக்கள், தற்போது தினமும் குடிநீர் கிடைப்பதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாநராட்சியில் வசிக்கும் 20 லட்சம் மக்களுக்காக, கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.1,609.69 கோடியில் அம்ரூத் மற்றும் ஆசிய வங்கி நிதியுதவி மூலம் தொடங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. 100 வார்டுகளில் 65 வார்டுகளில் முழுமையாக இந்த திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. மற்ற வார்டுகளில் பணிகள் சுறுசுறுப்பாக நடக்கின்றன. முதற்கட்டமாக இணைக்கப்பட்ட புறநகர் வார்டுகள் உள்பட மொத்தம் 36 வார்டுகளில் தினமும் காலையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை, வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டுமே குடிநீர் பெற்று வந்த இந்த வார்டு மக்கள், தற்போது தினசரி 2 மணி நேரம் குடிநீர் விநியோகத்தால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.