
கடந்த சில மாதங்களாக தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்க கட்டிகளுக்குச் சுங்கவரி விதித்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவில் தங்க விற்பனை 60 சதவீதம் சரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 காரட் (9K) தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச் சான்றிதழ் வழங்க அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் 9 காரட் தங்கம், இந்திய தரக் குழுமம் (BIS) வழங்கும் ஹால்மார்க் பட்டியலில் இணைக்கப்பட்டது.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் தங்க வகைகள்
9K, 14K, 18K, 20K, 22K, 23K, 24K
24K தங்கம் vs 9K தங்கம்
24K தங்கம் என்பது 99.9% தூய தங்கம், கலவை எதுவும் இருக்காது. 9K தங்கம் என்பது 37.5% மட்டுமே தங்கம் இருக்கும், மீதி 62.5% வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களின் கலவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஏன் 9K தங்கம்?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறைந்த விலையில் தங்கம் தேடும் கிராமப்புற மக்கள், 9K தங்கத்துக்கு மாறி வருகின்றனர்.
விலை வேறுபாடு
24K தங்கம் ஒரு கிராம் ₹10,000 வரை விற்பனையாகிறது.
ஆனால் 9K தங்கம் ஒரு கிராம் ₹3,700. 10 கிராம் தோராயமாக ₹37,000 வரை விற்பனையாகிறது. இதனால் மக்கள், 9K தங்கத்துக்கு மாறி வருகின்றனர்.
வரும் பண்டிகை மற்றும் திருமண சீசனில் தங்கத் தேவை அதிகரிக்கும் நிலையில், அரசின் இந்த முடிவு சந்தையில் களைகட்ட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.