• August 24, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் மகள் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில நாள்களாக இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் அடிக்கடி வலிப்பதாகச் சொல்கிறாள். இதனால் அபார்ஷன் அறிகுறியாக இருக்குமோ, கரு கலைந்துவிடுமோ என்றும் பயப்படுகிறாள். இந்த வலிக்கு என்ன காரணம், இதற்கு சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

இடுப்பும் தொடையும் சேருமிடத்தில், கர்ப்பத்தின் 3 அல்லது 4-வது மாதங்களில் சில பெண்களுக்கு திடீரென கடுமையான வலி வரும். அதை மருத்துவ மொழியில் ‘ரவுண்ட் லிகமென்ட் பெயின்’ (Round Ligament pain) என்று சொல்வோம். அந்த வலிக்கும் அபார்ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ரவுண்ட் லிகமென்ட் என்பது ஒயர் போன்ற ஓர் அமைப்பு. இது கர்ப்பப்பையிலிருந்து, இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் இணைந்திருக்கும்.

கர்ப்பத்தின் 3- 4 மாதங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையில் உள்ள கரு வளர, வளர, இந்த ரவுண்ட் லிகமென்ட் அமைப்பானது ஸ்ட்ரெச் ஆகும்.

அப்படி ஸ்ட்ரெச் ஆவதால் உணரப்படும் வலிதான் ரவுண்ட் லிகமென்ட் பெயின் எனப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த வலியை உணர்வார்கள். சில பெண்கள் இதை தீவிர வலியாக உணர்வார்கள்.

மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும்.

திடீரென இருமும்போது, தும்மும்போது, சத்தமாகச் சிரிக்கும்போது, படுக்கையிலிருந்து திடீரென பக்கவாட்டில் திரும்பும்போது, படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்கும்போது இந்த வலியை உணர்வார்கள்.

வழக்கமாக இரண்டு பக்கங்களிலும் வலி இருக்கும். ஆனாலும், இடது பக்கத்தில் இந்த வலி ஏற்படுவது மிகவும் சகஜமானது.

இந்த வலியை உணர்ந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. ஒருமுறை இந்த வலி வந்தால், அந்தப் பெண் எல்லா வேலைகளையும் நிதானமாகவே செய்ய வேண்டும்.

வேகமாக நடக்க வேண்டாம். உட்கார்ந்திருக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ திடீரென  எழுந்திருப்பது போன்றவை வேண்டாம். ரிலாக்ஸாகவே எதையும் செய்யச் சொல்லுங்கள்.

இந்த வலி வந்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி ஒன்றிரண்டு நிமிடங்கள் தாண்டியும் வலி தொடர்ந்தாலோ, அடிக்கடி இந்த வலி வந்தாலோ, நடக்கவே முடியாவிட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பம்
கர்ப்பம்

சிறுநீரகத் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலியா என்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

சிறுநீர்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட வலி என்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை உணர்வது, காய்ச்சல் வருவது போன்ற அறிகுறிகளும் இருக்கும். 

அந்த வலிக்கான சிகிச்சைகள் வேறு மாதிரி இருக்கும் என்பதால் இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையோடு யோகா மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொண்டாலே ரவுண்ட் லிகமென்ட் பெயின் குறைந்துவிடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *