
காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைது
பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக கோவாவில் உள்ள ஐந்து கேசினோக்களை – பப்பிஸ் கேசினோ கோல்ட், ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பிஸ் கேசினோ பிரைட், ஓஷன் 7 கேசினோ, பிக் டாடி கேசினோ ஆகியவற்றை அமலாக்க இயக்குநரகம் குறிவைத்து சோதனை நடத்தியது.
இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி.வீரேந்திரா கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், துபாயில் உள்ள சர்வதேச கேசினோக்கள் மற்றும் கேமிங் நடவடிக்கைகளுடன் தொடர்புகள் உட்பட ஒரு பெரிய சட்டவிரோத பந்தய வலையமைப்பு இருப்பது தெரியவந்தது.
தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்
விசாரணையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ‘கிங் 567’, ‘ராஜா 567’ போன்ற பல பந்தய வலைத்தளங்களை நடத்தி வந்ததாகவும், அதே நேரத்தில் அவரது சகோதரர் கே.சி.திப்பேசாமி கால் சென்டர் சேவைகள், கேமிங் போன்றவைகளுடன் இணைக்கப்பட்ட மூன்று நிறுவனங்களை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
MGM, Bellagio, Metropolitan, Marina, Casino Jewel ஆகிய இடங்களில் இருந்து பல சர்வதேச கேசினோ உறுப்பினர் அட்டைகளையும், தாஜ், ஹயாட், தி லீலா ஆகிய சொகுசு ஹோட்டல் உறுப்பினர் அட்டைகளையும், பல உயர் மதிப்புள்ள கிரெடிட், டெபிட் கார்டுகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும், ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் உள்ளிட்ட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 10 கிலோ வெள்ளி நகைகள், 0003 என்ற ஒரே VIP எண்ணைக் கொண்ட மூன்று சொகுசு கார்களும் மீட்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ வீரேந்திராவின் சகோதரர் கே.சி. நாகராஜ், மருமகன் பிருத்வி என் ராஜ் ஆகியோருடன் தொடர்புடைய 17 வங்கிக் கணக்குகள், இரண்டு லாக்கர்கள், சொத்து ஆவணங்களும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது.