
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்காட்லாந்தின் ஜெட்பரோக் காட்டுப் பகுதியில் ‘ஆப்ரிக்கப் பழங்குடி’ என அழைக்கப்படும் குழுவுடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இக்குழுவை ‘குபாலா இராச்சியம்’ என அழைக்கின்றனர். இதை கிங் ஆத்தெஹ்னே (கோபி ஓஃபே) மற்றும் குயின் நந்தி (ஜீன் காஷோ) ஆகியோர் தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கௌரா டெய்லர் என்ற அந்தப் பெண், தற்போது ‘அஸ்நாத்’ என்ற பெயரில் அக்குழுவில் வாழ்ந்து வருவதாக அவர் வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.
அதில், “நான் காணாமல் போனவள் இல்லை. என்னைச் சாந்தமாக விடுங்கள். நான் ஒரு பெரியவள்; குழந்தை அல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
400 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட தங்கள் முன்னோர்களின் நிலத்தை மீட்டெடுக்கிறோம் எனக் கூறி, இந்தக் குழுவினர் ஸ்காட்லாந்தின் சட்டங்களை ஏற்காமல், தாங்கள் நம்பும் கடவுள் “யஹோவா” (Yahowah) விதிகளை மட்டும் பின்பற்றி வாழ்கின்றனர்.
கூடாரங்களில் வசித்து வருகின்றனர். தினமும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, கூடாரத்திற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஸ்காட்லாந்து அதிகாரிகள் அவர்களின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், தேவையான ஆலோசனைகள் மற்றும் தங்குமிடம் தொடர்பான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.