
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அவரது வாட்ஸ்ஆப்பில் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்தது. பி.டி.எப் வடிவத்தில் அந்த அழைப்பிதழ் இருந்தது.
அழைப்பிதழோடு திருமணத்திற்கு வாருங்கள் என்றும் திருமண தேதி 30/08/2025 என்றும், அன்பு என்பது மகிழ்ச்சியின் வாயிலைத் திறக்கும் முதன்மை திறவுகோல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தத் திருமண அழைப்பிதழை ஷிண்டே திறந்தார். உடனே ஷிண்டேயின் போனை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களைத் திருடி ஷிண்டே வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.90 லட்சத்தை சைபர் கிரிமினல்கள் எடுத்துக்கொண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷிண்டே இது குறித்து ஹின்கோலி சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமண அழைப்பிதழ் மூலம் மோசடி செய்வது கடந்த ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு பலர் இது போன்ற மோசடியில் தங்களது பணத்தை இழந்தனர். கடந்த ஆண்டு ஹிமாச்சல பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் பைல்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்திருந்தனர். திருமண அழைப்பிதழ் மூலம் நடக்கும் மோசடிகளால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.