
சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர்.
இவ்வாறு பொதுமக்களிடம் மோசடியாகப் பெறும் பணத்தை சைபர் கிரிமினல்கள் தங்களது வங்கிக்கணக்கில் வாங்காமல் அதனை வேறு ஒருவரின் வங்கிக்கணக்கில் வாங்கி அங்கிருந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்து கொள்கின்றனர். மும்பையில் இது போன்ற சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
இது போன்ற குற்றத்திற்குப் பயன்படுத்துவதற்காக அப்பாவி மற்றும் ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்குவதற்காகவே மும்பை காந்திவலி பகுதியில் ஒரு அலுவலகம் செயல்படுவதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விசாரணை நடத்தியதில் போலி வங்கிக்கணக்கு திறப்பது மற்றும் சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்காக சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து கொடுப்பது, வங்கிக்கணக்குகளை வாடகைக்கு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வாடகை, விலைக்கு வாங்கப்பட்ட 943 வங்கிக்கணக்கு
அவர்களிடமிருந்து 50 வங்கி பாஸ்புக், 105 சிம்கார்டு, 484 ஏ.டி.எம் கார்டு, கார்டு ஸ்விப்பிங் மெஷின், 925 வங்கிக்கணக்கு விபரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அந்தேரி, தானே, டோம்பிவலி, கல்யான், அம்பர்நாத், பத்லாப்பூர், புனே போன்ற இடங்களில் ரெய்டு நடத்தி மேலும் 9 பேரைக் கைது செய்தனர். கைதான 12 பேரில் 5 பேர் காந்திவலி அலுவலகத்தை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இக்கும்பல் பொதுமக்களிடம் வங்கிக்கணக்கு திறக்கும்படி செய்கின்றனர். பின்னர் அந்த வங்கிக்கணக்கை இயக்கும் அதிகாரத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அந்த வங்கிக்கணக்கைச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ரூ.7 முதல் 8 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர்.
சில வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிதிக்குத் தக்கபடி கமிஷன் வாங்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராஜ் திலக் கூறுகையில், ”இக்கும்பல் விலைக்கு மற்றும் வாடகைக்கு வாங்கும் வங்கிக்கணக்கை சர்வதேச சைபர் கிரிமினல்களிடம் விற்பனை செய்து விடுகின்றனர். அந்த வங்கிக்கணக்கை வாங்கும் கும்பல் டிஜிட்டல் கைது, போலி ஆன்லைன் ஷாப்பிங், கடன் செயலி மோசடி, பங்குச்சந்தை மோசடி போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் 943 வங்கிக்கணக்குகளைக் கையாண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக மும்பையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையைத் தவிர்த்து மகாராஷ்டிராவில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.60 கோடி மோசடி
இந்த வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி மும்பையில் ரூ.1.67 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.10.57 கோடியும் என நாடு முழுவதும் மொத்தம் ரூ.60.82 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 277 புகார்கள் வந்திருக்கின்றன.
வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டதில் வங்கி அதிகாரிகள் சரியான நடைமுறையைப் பின்பற்றினார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

19 மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பாக 333 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதில் மும்பையில் கைதான கும்பலுக்குத் தொடர்பு இருப்பது அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
சைபர் குற்றம் தொடர்பாக நாடு முழுவதும் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களையும், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
சைபர் குற்றம் மூலம் வாடகை வங்கிக்கணக்கில் பெறப்படும் பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.