
உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை தொட்டியில் 6 வயது குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
போலீஸாரின் விசாரணையில் சூரத்தில் கடத்தப்பட்ட குழந்தையைக் கொலையாளி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கொண்டு சென்று இருக்கிறான்.
அங்கிருந்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி மும்பைக்குப் பயணம் செய்துள்ளான். மும்பை வரும் போது குழந்தையைக் கொலை செய்து கழிவறை குப்பை தொட்டியில் வைத்திருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோர் சூரத்தில் இருந்து மும்பை வந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்தபோது முன்பகை காரணமாக உறவினர்கள் குழந்தையைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கொலையாளியைக் கண்டுபிடிக்க சூரத், நாசிக் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.