
இந்தூர்: 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா முற்போக்கானது என்றும், இதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்ற தாயின் பெயரில் மரம் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றினை நட்ட அர்ஜுன் ராம் மேக்வால், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.