
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிகளிலும், விவசாய நிலங்களில் முகாமிடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் நேற்று முன்தினம் பெண் யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் குட்டியுடன் இந்தப் பகுதிக்கு வந்தது.
நேற்று பள்ளங்கி, கோம்பை பகுதி அருகே கணேசபுரம் பகுதியில் உள்ள செல்வம் என்பவரது தனியார் தோட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை மயங்கி கீழே விழுந்து எழ முடியாமல் இருப்பதை தோட்ட உரிமையாளர் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் பெண் யானை அருகே இருந்த ஒன்றரை வயதுடைய குட்டி ஆண் யானை தனது தாய் யானையை யாரும் நெருங்க விடாமல் அனைவரையும் முட்டுவது போல் மிரட்டி தனது பாசப் போராட்டத்தை நடத்தி வந்ததது.
இதனால் சிகிச்சை அளிக்க பெண் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரிக்க வனத்துறையினர் பெரும் சிரமம் அடைந்தனர்.
பல முயற்சிகள் செய்தும் பலனாளிக்காத நிலையில் முடிவில் ஜேசிபி வாகனம் கொண்டு பெண் யானையை குட்டி யானை நெருங்க விடாமலும், வெடி வெடித்து பிரித்து அருகே உள்ள வேறு பகுதிக்கு விரட்ட்டி அங்கு மக்காச்சோளம், வாழை இலைகளை குட்டி யானைக்குக் கொடுத்து குட்டியானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் பெண் யானைக்கு குளுக்கோஸ், ஆண்டி பயாடிக் மயக்க மருந்துகள் உள்ளிட்டவற்றைச் செலுத்தி சிகிச்சை அளித்தனர். மேலும் சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.
பெண் யானை வயது முதிர்ந்த நிலையில் (50) கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது காரணமாகப் போதிய சத்துக்கள் இல்லாததால் பெண் காட்டு யானை திடீரென மயங்கி கீழே விழுந்து இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
பெண் யானைக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னரே எழுப்ப முடியும் என மருத்துவர்களும், வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். இந்நிலையில் தாய்யானை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. இந்த நிலையில் இறந்த போன தாய் யானையின் அருகிலேயே அதனுடைய குட்டி யானை சுற்றி வந்து எழுப்ப முயற்சிக்கும் பாசப்போராட்டம் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.