
உணவு போல உலோகப் பொருட்களைச் சாப்பிட்ட மனிதராக பிரான்ஸைச் சேர்ந்த மிச்சேல் லொட்டிடோ (Michel Lotito) என்பவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வினோதமான சாதனைகளில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டு மிச்சேல் லொட்டிடோவின் வாழ்க்கை இன்று வரை பேசப்படுகிறது. மிச்சேல் லொட்டிடோ குறித்து விரிவாக இந்தப் பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
வினோத திறன் எப்படித் தொடங்கியது?
1950-ல் பிரான்சின் க்ரெனோபிள் நகரில் பிறந்த லொட்டிடோ, 9 வயதில் தவறுதலாக கண்ணாடி துண்டை விழுங்கியிருக்கிறார். இதனால் அவரின் உடலின் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தான், சாதாரண உணவுகளைவிட உலோகங்களைச் சாப்பிடும் விசித்திரமான திறன் அவரிடம் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார். பின்னர் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் வயிற்றின் உள் உறுப்புகள் சாதாரண மனிதரை விட தடிமனாகவும், ஜீரண சக்தி அதிக வலிமையுடனும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து இவர் அசாதரண பொருட்களைச் சாப்பிட்டு வந்துள்ளார்.
அவர் சாப்பிட்டவை என்னென்ன?
லொட்டிடோ தனது வாழ்நாளில் சைக்கிள்கள், டிவிகள், ஷாப்பிங் கார்டுகள், ஆணிகள், படுக்கைகள் எனப் பல பொருட்களைச் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமானத்க்ச் சாப்பிட்டு சாதனை
அவரின் பெரிய சாதனையாக 1978-ல் செஸ்னா சிறிய விமானத்தை சிறு துண்டுகளாக்கி தினமும் சாப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, 1980-ல் அவர் முழு விமானத்தையும் சாப்பிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர்
1959 முதல் 1997 வரை அவர் சுமார் 9 டன் உலோகப் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகம் அவரை “உலகின் மிக வினோதமான உணவுமுறை கொண்டவர்” எனப் பதிவு செய்தது. ஆனால் பின்னர் இத்தகைய ஆபத்தான சாதனைகள் தவிர்க்கப்படும் வகையில் அந்தப் பிரிவை கின்னஸ் சாதனை புத்தகம் புறக்கணித்தது.
2007 ஆம் ஆண்டு தனது 57 வயதில் லொட்டிடோ மரணம் அடைந்தார். ஆனால் அவர் சாப்பிட்ட சாதனைகள் இன்னும் உலகத்தை வியக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.