• August 23, 2025
  • NewsEditor
  • 0

“தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

செல்லூர் ராஜூ

கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியிருந்ததும், மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படம் வைத்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இந்த நிலையில் செல்லூர் ராஜூம் தன் பங்குக்கு பேசியுள்ளார்.

செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்தவுள்ள பிரசார பயணத்துக்கு மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் அனுமதி கேட்டு கட்சி நிர்வாகிகளுடன் வந்த செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் எழுச்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார், செப்டம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

அதிமுகவின் நிலைப்பாடு

தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்.ஜி.ஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை, எம்ஜிஆர் என்றாலே ஒரே எம்ஜிஆர் தான்.

வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும், ஊழலற்ற ஆட்சி தர வேண்டும், ஏழை, எளிய மக்களுக்கு நல்லத் திட்டங்களை செய்து தர வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு,

இத்தகைய நிலைப்பாட்டுடந்தான் 31 ஆண்டுகளாக ஆட்சி செய்தோம், அதிமுகவில் எம்ஜிஆர் 17 லட்சம் தொண்டர்களை சேர்த்தார், ஜெயலலிதா ஒன்றரைக் கோடி தொண்டர்களை சேர்த்தார், எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத அளவிற்கு இரண்டரைக் கோடி தொண்டர்களை அதிமுகவில் சேர்த்துள்ளார்.

செல்லூர் ராஜூ – விஜய்

எம்ஜிஆர் வாரிசுகள்

அரசியல் களத்திற்கு வரக்கூடிய புது முகங்கள் எல்லாமே எம்ஜிஆர் வாரிசுகள் என சொல்லிக் கொள்கிறார்கள்.

நடிகர் விஷால் சொன்னார், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோரும் எம்ஜிஆரின் அரசியல் வாரிசுகள் என்றனர்.

இவ்வளவு ஏன் நடிகர் சிவாஜி கூட சொன்னார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா என குறிப்பிட்டார், விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என கூறியுள்ளார், எம்ஜிஆரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் மக்களோ, எம்ஜிஆரை அதிமுகவை உருவாக்கியதாகத்தான் பார்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிதான் அனைத்து தரப்பு மக்களும் விரும்பக்கூடியத் தலைவராக இருக்கிறார்.

`திடீர் சாம்பார், பாஸ்ட் ஃபுட் மாதிரி’

திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட் ஃபுட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார். அரசியலில் விஜய் நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும், எம்ஜிஆருடன் விஜய் தன்னை ஒப்பிட்டு பேசுவது தவறு, அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆர் உழைத்து படிப்படியாக அரசியலில் முன்னேறி வந்தார், ஆனால், விஜய் அரசியலில் நேரடியாக வந்து ஆட்சி பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

விஜய் யாருடைய துணையும் இன்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார், விஜய்க்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும், மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என எம்ஜிஆர் சொல்வார், அதையேதான் நாங்களும் சொல்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *