
பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பியுமான கோவிந்தாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
கோவிந்தா தனது மனைவியுடன் தங்காமல் தங்களது வீட்டிற்கு எதிரில் இருக்கும் மற்றொரு வீட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கும் கோவிந்தா மனைவி நியாயம் கற்பித்து வந்தார்.
‘கோவிந்தா வெளியில் சென்று விட்டு பலரையும் சந்தித்துவிட்டு தாமதமாக வருவார். எனவேதான் அவர் அருகிலேயே வேறு ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்’ என்று கோவிந்தா மனைவி சுனிதா தெரிவித்தார்.
இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுனிதா மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
இம்மனுவை சுனிதா கடந்த மே மாதமே தாக்கல் செய்துவிட்டதாகத் தெரிகிறது. சுனிதா தனது மனுவில் கோவிந்தா மீது துரோகம், திருமணம் மீறிய உறவு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்.
அதோடு கொடுமை செய்தல், கைவிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இந்த விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்து இருக்கிறார். இதையடுத்து கோர்ட் கோவிந்தாவிற்குச் சம்மன் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து இருவரும் பிரச்னைக்குப் பேசித்தீர்வு காண முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இதில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் விவாகரத்து மனு மீதான விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணையின் போது சுனிதா சரியான நேரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். ஆனால் கோவிந்தா கோர்ட்டிற்கு வருவதைத் தவிர்த்து வருகிறார்.
கடந்த மே மாதமே இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியானது. கோவிந்தாவிற்கு 30 வயது மராத்தி நடிகை ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக அவர்களின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில், ”கோவிந்தாவும், அவரது மனைவியும் 6 மாதத்திற்கு முன்பே விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள போதிலும், அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர். இருவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
கோவிந்தாவின் மனைவி சுனிதா தனது கணவருடனான விவாகரத்து தொடர்பான செய்திக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது பிளாக்கில் வெளியிட்டுள்ள பதிவில், ”நான் மும்பை மகாலட்சுமி கோயிலுக்குச் சிறு வயதில் இருந்தே சென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் கோவிந்தாவைச் சந்தித்தபோது, நான் அவரைத் திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று தேவியிடம் பிரார்த்தனை செய்தேன். தேவி என் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினார்.

அவர் எனக்கு இரண்டு குழந்தைகளைக்கூட வழங்கினார். ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு உண்மையும் எளிதானது அல்ல. எப்போதும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இருப்பினும், தேவி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, இன்று நடப்பது, எனது குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தினாலும் அங்கே மாகாளி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலியை ஏற்படுத்துவது சரியல்ல.
தேவியின் மூன்று வடிவங்களையும் நான் ஆழமாக நேசிக்கிறேன். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், என் குடும்பத்தை உடைக்க முயற்சிக்கும் எவரையும் தேவி மன்னிக்க மாட்டாள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாலிவுட் தம்பதியின் இந்த விவாகரத்து வழக்கு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நாட்களாக இருவருக்கும் இடையே இருந்த புகைச்சல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…