
ஸ்ரீநகர்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு காஷ்மீர் உள்ளூர் மக்கள் உதவி செய்வது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகிறது.
அதன்படி, பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர விசாரணையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கர்னா என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய குர்ஷித் அகமது ராதெர் மற்றும் கெரான் பகுதியில் அரசு ஆடு வளர்ப்புத் துறையில் இருப்பு கணக்குகள் பராமரிக்கும் ஊழியர் சையது அகமது கான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.