
“வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன” ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நடைபயணத்திற்கு, ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை சாடிய ராகுல்காந்தி
இந்த நடைபயணத்தின் போது, பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பேசிய ராகுல்காந்தி, “பிரதமர் மோடியின் அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் மக்களின் அரசியல் சாசன உரிமையான வாக்குரிமையைப் பறிக்க இணைந்து செயல்படுகின்றனர்.
சிறப்பு தீவிரத் திருத்தம் என்பது மக்களின் வாக்குகளைத் திருட மோடி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியாகும்.
வாக்குத் திருடர் (மோடி) பீகாரில் உள்ள கயாஜிக்கு வந்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு, மக்களின் வாக்குகளைத் திருட முயலும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
அரசியல் சாசனத்தின் படி, அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் வாக்கு செலுத்த உரிமை உண்டு. ஆனால், வாக்குகளை ரத்து செய்வதன் மூலம் மோடியும், தேர்தல் ஆணையமும் அதை மீறுகிறார்கள்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு
வேலைக்காக மாதக்கணக்கில் இளைஞர்கள் படித்து, தேர்வு எழுத நினைக்கிறார்கள். ஆனால், தேர்வு தேதியின் போது, வினாதாள் கசிந்துவிடுகிறது. அதனால், இளைஞர்களால் வேலை பெற முடியவில்லை.

முன்னர், லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தில் சேருவார்கள். அவர்கள் நாட்டை பாதுகாப்பார்கள். பென்சன் பெறுவார்கள். இதெல்லாம் சரியாக நடந்தது.
ஆனால், இப்போது ஒரு அக்னிவீரர் தனது கையை இழந்துவிட்டார். ஆனால், அவருக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை. இப்போது அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விவசாயச் சட்டங்கள் என அனைத்துமே ஏழை மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது” என்று பேசியுள்ளார்.