
எம்ஜிஆர் புகழ் பாடிய விஜய்
விஜய் தவெகவைத் தொடங்கிய பிறகு, முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதுரையில் நடந்த இரண்டாவது மாநாடு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில், விஜய் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசியதுடன், விஜயகாந்துடனான தனது நட்பையும் குறிப்பிட்டார்.
“சினிமாவிலும் அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரது குணம் கொண்ட மதுரை மண்ணின் மைந்தர் விஜயகாந்துடன் உரையாடும் பாக்கியம் கிடைத்தது. எம்.ஜி.ஆர்னா யாரு தெரியும்ல, அவர் மாஸ்னா என்னானு தெரியும்ல, அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல.
எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியானது; அவர் முதலமைச்சராக இருந்தபோது, அந்தப் பதவியைப் பற்றி யாரும் கனவு காணக்கூட முடியவில்லை. ஆனால், இன்று அவர் தொடங்கிய அ.தி.மு.க எப்படி இருக்கிறது? அப்பாவித் தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்று விஜய் பேசினார். இந்தப் பேச்சு, அ.தி.மு.க-வின் வாக்குகளை த.வெ.க-வுக்கு திருப்பும் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க-வின் கடும் எதிர்ப்பு!
விஜய்யின் பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதிய கட்சி தொடங்குபவர்கள் எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தித்தான் ஆரம்பிக்க முடியும். ஆனால், அ.தி.மு.க இப்போது யார் கையில் இருக்கிறது என்று தெரியாமல் ஒருவர் கட்சித் தலைவராக இருந்தால், தொண்டர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எல்லாராலும் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ ஆக முடியாது. உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர், ஒரே ஒரு ஜெயலலிதாதான். வாக்குகளைப் பெறுவதற்காக சிலர் இவர்களின் பெயரைப் பயன்படுத்தலாம். ஆனால், இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த சின்னத்துக்கும் வாக்களிக்காது. மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்,” என்று கடுமையாக விமர்சித்தார்.

விஜயகாந்தின் பாதையில் விஜய்?
அரசியல் நோக்கர்கள், விஜய்யின் இந்த உத்தி புதிதல்ல என்கிறார்கள். “விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசினார். தே.மு.தி.க தொண்டர்கள் அவரை ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று அழைத்தனர். அப்போது, ஜெயலலிதா, ‘நானே எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு’ என்று பதிலடி கொடுத்தார். விஜயகாந்த், ‘எம்.ஜி.ஆர் யாரையும் தன் வாரிசாக அறிவிக்கவில்லை’ என்று பதிலளித்து, தேர்தல் களத்தை சூடாக்கினார். இதன் விளைவாக, தே.மு.தி.க 10.29% வாக்கு வங்கியைப் பெற்றது,” என அரசியல் நோக்கர்கள் நினைவூட்டுகின்றனர். மேலும் விஜய்யும் இதே உத்தியைப் பயன்படுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.
“பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் த.வெ.க-வுக்கு வாக்களிப்பார்கள் என்று விஜய் நம்புகிறார். ஆனால், விஜயகாந்த் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார்; விஜய்யோ அப்படி இல்லை. மேலும், அவர் தனது கொள்கைகளை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, அவை குறித்து அவர் பேசவே இல்லை. எனவே, இந்த முயற்சி வெற்றி பெறுவது கடினம்,” என்று அவர்கள் கூறுகின்றனர்.

விஜய்யின் முயற்சி எடுபடுமா?
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா இதுகுறித்து கூறுகையில், “விஜய்யால் தி.மு.க, அ.தி.மு.க வாக்குகளைப் பெற முடியாது. அவரது ரசிகர்களும் புதிய வாக்காளர்களுமே அவருக்கு வாக்களிப்பார்கள். முதல் மாநாட்டில் கொள்கைத் தலைவர்கள், சித்தாந்த எதிரிகளைப் பற்றி பேசினார். அப்போது விஜய் புதிய பாதையில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், இப்போது திராவிட இயக்கத் தலைவர்களைப் புகழ்ந்து பேசுவதால், கொள்கைத் தெளிவு இல்லை என்று தோன்றுகிறது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வியூகம் தெரிந்த தொண்டர்களைக் கொண்டவை; த.வெ.க-வில் அப்படியானவர்கள் இல்லை. விஜய் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி ஐந்தாண்டுகள் போராடினால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும்,” என்றார்.

விஜய்க்கு அ.தி.மு.க-வினர் வாக்களிக்கமாட்டார்கள்
அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் கூறுகையில், “விஜய் அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்ததாகச் சொல்வது உண்மையில்லை. அவர் தி.மு.க-வையும் பா.ஜ.க-வையும்தான் விமர்சித்தார். புதிய கட்சிகள் எம்.ஜி.ஆரைப் போல ஆட்சி செய்வோம் என்றே சொல்கின்றன; கருணாநிதியைப் போல என்று சொல்வதில்லை. இதனால் எங்கள் தலைவரின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
அ.தி.மு.க ஒரு வலுவான இயக்கம்; யாராலும் எங்களைப் பாதிக்க முடியாது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு குழப்பங்கள் வந்தபோதும், ஒரு தொண்டர் கூட வெளியேறவில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். விஜய்யின் ரசிகர்கள் அ.தி.மு.க-வினர் வீட்டில் இருக்கலாம்; ஆனால், அவர்களும் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்,” என்றார்.

விஜய்யின் எம்.ஜி.ஆர் புகழாரம், அ.தி.மு.க வாக்குகளை த.வெ.க-வுக்கு திருப்புவதற்கான உத்தியாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க-வின் தொண்டர் படையும், தலைவர்கள் மீதான அவர்களின் விசுவாசமும், விஜய்யின் இந்த முயற்சியை சவாலாக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். மேலும், விஜய்யிடம் கொள்கைத் தெளிவு இல்லாமை மற்றும் மக்கள் பிரச்னைகளில் நேரடி ஈடுபாடு இன்மை ஆகியவை த.வெ.க-வின் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என்றே பலரும் சொல்கிறார்கள். எனவே விஜய்யின் உத்தி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது 2026 தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.