
த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
த.வெ.க மாநாடு
“தமிழக வெற்றிக் கழகம் நடத்தியிருக்கும் இரண்டாவது மாநாடு, வெற்று கூச்சலுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளம்.
உருப்படியாக, எந்தக் கொள்கை கோட்பாடு முழக்கமும் இல்லை. ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
திமுக வெறுப்பு… திமுக வெறுப்பு… திமுக வெறுப்பு – இது தான் அந்த மேடையில் உமிழ்ந்த அரசியல்.
ஆட்சிக்கு வருவோம் என்று ஆர்பரித்த பகல் கனவைக் கூச்சல்கள் முழங்கிய முழக்கங்கள் தான் அங்கே காணப்பட்டன.
கட்சி தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆகியும், இரண்டு மாநாடுகள் நடத்தியும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளும், செயல்திட்டங்களும் அவர்களுக்கே தெரியவில்லை என்பது அவர்களது வெற்று ஆரவாரத்தில் நமக்கு உறுதியாகிறது.
இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார். வெறும் திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்திருக்கிறார் விஜய்.
அவருடைய பேச்சில் ஆக்கப்பூர்வமான எந்தக் கருத்தும் இல்லை, கருத்தியலும் இல்லை.
அமித்ஷா வருகை
அமித்ஷா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார். அவ்வப்போது தாமரை மலரும் என்று குறி சொல்கிறார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதல் வேலை என்று சவடால் பேசுகிறார்.
புதிதாக தோன்றுகிற கட்சியாக இருந்தாலும், பாஜக போன்ற பழைய கட்சிகளாக இருந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மண்ணில் அவர்களின் சதி முயற்சி வெற்றி பெறாது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்.

அதிமுக மீதான விமர்சனம்
அதிமுக குறித்த விஜய் விமர்சித்துள்ளார். இதற்கு அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும். நான் எம்.ஜி.ஆரைப் பற்றி சொன்ன உடனேயே எகிறி குதித்தார்கள். ஆனால், இப்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவை இவர்கள் ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை.
‘தற்குறி பழனிசாமி’ என்று பேசியவர் அண்ணாமலை. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு மௌனித்து கிடந்தார்கள்.
‘சமூகத்தில் இப்படி இருக்கிறது’ என்று யாரோ சொன்னதை நான் மேற்கோள் காட்டி, இப்படி விமர்சனங்கள் இருந்தாலும் என்று பேசினேன். உடனே, பாய்ந்து, பிராண்டினார்கள்.
இப்போது விஜய் பேசியதற்கு என்ன சொல்வார்கள் என்பதைக் கேட்டு சொல்லுங்கள்” என்றார்.