
இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்றைய தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மற்றும் விஜய்யின் உரை பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
“எல்லோரும் நம்பர் 1 என்பார்கள்”
“தங்களுக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி என்பதை சொல்லவில்லை என்றால் எதற்கு விஜய் மாநாடு நடத்த வேண்டும்? டிவி சேனல்களும்தான் நாங்கள் நம்பர் ஒன் எனச் சொல்கிறீர்கள், அரசியல் கட்சிகள் எல்லோரும் நாங்கள்தான் நம்பர் ஒன் என்கிறோம். இதெல்லாம் தொழில் இருப்பவர்கள் சொல்வதுதான். ஆனால் இன்றைக்கு தமிழக அரசியல்களம் என்ன என்பது விஜய் அவர்களுக்கும் தெரியும். ” என்றார் அண்ணாமலை.
தாய்மாமன், பாசிச பாஜக?
மேலும் அவர், “குழந்தைகளுக்கு தாய்மாமன் என்றால், 50 ஆண்டுகளாக தாய்மாமன் எங்கே இருந்தார்? அவர் நடித்த படங்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுப்பாரா? தாய்மாமன் என்ற வார்த்தையெல்லாம் ரொம்ப யோசித்து பயன்படுத்த வேண்டிய வார்த்தை.
நான் விஜய் அவர்களின் அரசியலை வரவேற்கிறேன். புதியவர்கள் வரணும். ஆனால் பேச்சில் ஆழம் இருக்கணும். சும்மா பாசிச கட்சி எனக் கூறினால், அதைக்கேட்டுவிட்டு பேசாமல் போனால் ஒரு தொண்டனாக கட்சியில் நான் இருப்பதற்கு மரியாதை இல்லை.

பாஜக-வில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் பல விஷயங்களை இழந்து இதில் இருக்கிறோம். எங்களுக்கு என்ன கான்டிராக்ட் கிடைக்கிறதா? சம்பாதிக்கிறோமா? ஒரு கொள்கை உத்வேகத்தில் கட்சியில் இருக்கிறோம். என்னுடைய கட்சியை பாசிசம் அப்படி இப்படி சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதிலும் கண்ணியத்துடன் விஜய் அவர்களுக்கு மரியாதை கொடுத்து இந்த பதிலை சொல்லியிருக்கிறேன்.” என்றார்.
பக்குவமில்லாதவரை எப்படி முதல்வராக்குவார்கள்?
அத்துடன், “அரசியல் கட்சி ஆரம்பித்த முதல் நாள் யாரையும் பேசமாட்டேன், ஆரோக்கியமான அரசியல்தான் செய்வேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் நேற்று அவரது பேச்சு எப்படி இருந்தது. ஸ்டாலினை மாமா என்கிறார். எனக்கும் முதலமைச்சர் மீது 1008 கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் மேடையில் பேசும்போது மாமா என்பதா? இது சினிமாவில் கேட்க நன்றாக இருக்கும். விசில் அடிப்பார்கள், கைதட்டுவார்கள்.
ஒரு திமுக அமைச்சர் விஜய் அவர்களைப் பார்த்து பூமர் என்று சொன்னால் எப்படியிருக்கும்? மனது கஷ்டப்படுமா, படாதா? அதே வார்த்தையை நான் பயன்படுத்த ரெண்டு நிமிஷம் போதும். அதனால் வார்த்தைகளைப் பயன்படுத்தும் முன் பக்குவமாக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
பக்குவமில்லாதவரை எப்படி முதலமைச்சராக்குவார்கள்?” என்றும் பேசினார்.