
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய். கட்சியை ஆரம்பித்த 18 மாதங்களில் 2-வது மாநில மாநாடு என்பது கவனிக்கத்தக்கதுதான். மாநாடு பற்றியும், அதில் விஜய்யின் 45 நிமிட உரையையும், ‘மாஸ் கூட்டம், தெறி ஸ்பீச்’ என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள், தவெகவின் தொண்டர்கள். ஆனால், ஆளுங்கட்சியினரும், ஆட்சியில் இருந்தவர்களும் விஜய்க்கு அரசியல் ஆழம் தெரியாது என்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்களோ, விஜய் பேச்சினை டிகோட் செய்து சாதக, பாதகங்களைப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் சொன்னதுபோலவே, பாரபத்தி மாநாட்டிலும் நமது கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக என்று ஆவேசமாகப் பேசினார். ‘அங்கிள் ஸ்டாலின்’ என்றும் ‘டூர் போகும் மோடி ஜி’ என்றெல்லாம் அரசியல் மேடைக்கு ரசனையாக இருக்கும்படி எழுதப்பட்ட பேச்சை ஆகச் சரியாக டெலிவரி செய்தார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. அவரது முழக்கங்கள், சவால்கள், சுவாரஸ்ய கேள்விகள், குட்டிக் கதையெல்லாம் ஒருபுறம் இருக்க, மாநாட்டில் விஜய் பேச்சில் ஒலித்த அதிமுக மீதான ‘அக்கறை’ தான் நாம் எடுத்துக் கொண்டுள்ள அலசல் புள்ளி.